Monday, June 20, 2011

லிபியாவிற்கு முடிந்தது சிறீலங்காவிற்கு முடியாதா?



ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கையை வழங்கி ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. அந்த அறிக்கை தொடர்பாக சிறீலங்காவின் பதிலுக்காக மாதங்களைக் கடந்தும் இலவு காத்தகிளியாக பொறுமையோடு காத்திருக்கின்றார் செயலாளர் பான் கீ மூன்.

காத்திருக்கின்றாரா அல்லது காலத்தைத்
தள்ளிப்போடுகின்றாரா என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன.இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பொதுச்சபை ஆகியவற்றினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்திலேயே இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் மேற்படி அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளையும் விடுக்காதுபோனால், சிறீலங்கா அரசாங்கம் அவ்வாறானதொரு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறுகின்றார் ஐ.நா. செயலாளரின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 17வது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ம் திகதி முதல் யூன் மாதம் நடுப்பகுதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் 28வது அங்கமாக ‘நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கூட்டுப் படுகொலைகள்’ என்ற விடயம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தின் கீழ் சிறீலங்கா மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், நிகழ்ச்சி நிரலில் இதுவரை சிறீலங்காவிற்கு எதிரான எந்தவொரு பிரேரணையும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.எனினும், ஐ.நா. நிபுணர் குழுவினரின் அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு சிறீலங்காப் படையினரே அதிகளவில் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில், மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைகளை எந்தவொரு நாடாவது முன்வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு முன்வைக்கப்பட்டால் அதனை முறியடிக்க சிறீலங்கா எவ்வாறான வழிகளை எல்லாம் கையாளும் என்பதும் தெரிந்தவிடயம். ஏற்கனவே, தனக்கு ஆதரவான நாடுகளை வளைத்துப்போடும் நடவடிக்கையில் சிறீலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தியா, சீனா ஊடாக அது தனது காய்களை வேகமாகவே நகர்த்தி வருகின்றது. இந்நிலையில் சிறீலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகளை மீறி சிறீலங்காவிற்கு எதிராக ஐ.நாவினால் எதுவும் செய்யமுடியாது என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், சிறீலங்காவினை விட அதிக ஆதரவு நாடுகளைக்கொண்ட லிபியா மீது நடவடிக்கை எடுப்பது எவ்வாறு சாத்தியமானதென்ற கேள்வி இங்குஎழுகின்றது.

கடாஃபிக்கு எதிரான புரட்சி தொடங்கியவுடன் ஐ.நா பாதுகாப்புச் சபையில் உறுப்புரிமை நாடுகள் கடாஃபிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றின. லிபியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்ததோடு, லிபியாவின் வெளிநாட்டு நிதி வைப்புக்களும் முடக்கப்பட்டன. ‘பொது மக்களைக் கொல்லும் முவம்மர் கடாபி மற்றும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகச் சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்ல, தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு போர்க் குற்றங்களுக்காக கடாஃபி, அவரது மகன் சயிப் அல் இஸ்லாம், புலனாய்வுத் துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுஸ்ஸி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனது நாட்டின் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக லிபியா அதிபரை அகற்றுவதில் அல்லது அழிப்பதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. ஆனால், போர்க் குற்றங்கள் புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்ததன் பின்னரும், லிபியாவின் நண்பர்களான சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா. கடுமையாகயோசித்துவருவதுபலத்தசந்தேகங்களையேஏற்படுத்திவருகின்றது.

சிறீலங்காவின் போர்க் குற்றச்சாட்டு விடயங்களைக் கையாள்வதில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக வெளிப்படையாகவே பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமிழர்களுக்கு நடந்ததாகப் பார்க்காமல், மனிதர்களுக்கு நடந்ததாகப் பார்த்தாலே போதும் மனச்சாட்சியின்படி நடவடிக்கை எடுக்கப்போதும் என்றும் பான் கீ மூனை வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்தும் அவர் மௌனம் காப்பது தமிழினப் படுகொலையில் பான் கீ மூனின் பங்கு குறித்த கேள்விகளையே ஏற்படுத்துகின்றது.


நன்றி - ஈழமுரசு_85

No comments:

Post a Comment