Lebal

Monday, September 26, 2011

மீண்டும் ஒரு ஆயுதப் புரட்சிக்கு தயாராகின்றனரா? நுணுக்கமாக அவதானிக்கும் அரசு

இலங்கையின் பிரதான மாக்ஸிட் கட்சியான ஜே.வி.பி.யில் உருவாகியிருக்கும் உட்கட்சிப் பூசல்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் நெருக்கமாக அவதானித்து வருவதாக கொழும்பு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக கட்சி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் தலைமறைவாகி மற்றொரு ஆயுதப் போராட்டத்தை நோக்கிச் செல்லலாம் என்பதாலேயே இவ்விடயத்தை அரசாங்கம் நுணுக்கமாக அவதானித்துவருவதாகத் தெரிகின்றது.


கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதையடுத்து அதன் செயற்பாடுகளையிட்டு நுணுக்கமாக அவதானிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

குமார் எனப்படும் பிரேமகுமார குணரட்ணம் தலைமையிலான கிளர்சிக்குழு தனியான குழு ஒன்றை அமைத்திருப்பதுடன், தம்மை ஒரு கிளர்ச்சிக்குழு போல காட்டிக்கொண்டு செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1988-89 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் கிளர்சியில் முக்கிய பங்காற்றிய குமார், அவுஸ்திரேலியாவில் இருந்த பின்னர் மீண்டும் நாடு திரும்பி ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளில் இணைந்து செயற்படத் தொடங்கியதையடுத்தே கட்சியில் பிளவு ஏற்பட்டது.

இந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு இணையத்தளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ஜே.வி.பி.யின் தலைமையகத்துடன் எந்தவிதமான தொடர்புகளையும் கொண்டிருக்காமல், ஒரு புரட்சிக் குழுவாக தமது குழு செயற்படும் எனத் தெரிவித்தார்.

கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்சிக் குழுவுக்கே தமது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்த அவர், தமது குழு மீண்டும் ஒரு ஆயுதப் புரட்சியில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படும் தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்ததுடன், சோமவன்ச அமரசிங்கவின் குழுவினரே இந்த வதந்திகளைப் பரப்பிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

No comments:

Post a Comment