Lebal

Wednesday, January 18, 2012

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால் உழுது நாசமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச படைகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனம் வன்னியின் முல்லைத்தீவு பகுதியில் அரங்கேறியுள்ளது. வன்னியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலுமில்லமான முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி சிறீலங்கா படைத்தரப்பினால் கனரக வாகனங்கள் சகிதம் நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு  அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தமிழ் மக்களிடையெ மீண்டுமொரு முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே வன்னி இராணுவ நடவடிக்கைகளையடுத்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதி படைத்தரப்பினால் இடித்தழிககப்பட்டிருந்ததுடன் கல்லறைகள் உள்ளிட்ட அனைத்தும் அப்பறுப்படுத்தப்பட்டுமிருந்தது. இந்நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதியில் படைத்தளமொன்றினை அமைக்கும் வகையினில் தற்போது எஞ்சிய கல்லறைகளது வன்கூட்டு தொகுதிகள் கூட படைத்தரப்பு அகற்றும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படைத்தரப்பின் இத்தகைய நடவடிக்கைகள் மனித குலத்தின் மாண்பை காலில் போட்டு மிதிக்கும் ஓர் நடவடிக்கையென தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இவ் அநியாயம் தொடர்பினில் பலர் தமக்கு இன்று காலை முதல் தகவல்களை தெரிவித்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

படைத்தரப்பினால் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் பலவும் தற்போது படைதரப்பின் இராணுவ தளங்கள் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment