Lebal

Monday, January 16, 2012

விரிவடையும் சிங்களப் புலனாய்வு நிறுவனத்தின் வலைப்பின்னல்

இதயச்சந்திரன்
பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள்.
இவர்கள்தான் வரலாற்றை வரைபவர்கள். மாற்றங்களை உருவாக்கும் உந்து சக்திகளும் இவர்களே. இந்த மாமனிதர்களை நினைவு கூருவது, அவர்களின் இழப்பில் வெளிக் கொணரப்பட்ட போராட்ட உணர்வுச் செய்தியை மக்களுக்களிடையே கொண்டு செல்வது, வரலாற்றை எழுதுபவர்களின் பணியாகிறது.

விடுதலைப் புலிகளை அழித்து விட்டோமென 2009 மே 18 இல் வெற்றி முழக்கமிட்ட சிங்கள பேரினவாத தேசம், புலிகளின் அனுதாபிகளால் ஆபத்தென கூக்குரலிடத் தொடங்கிவிட்டது. இதில் ஒரு உண்மையும் இருக்கிறது. ஒடுக்கப்படும் மக்களை நோக்கி, வித்தாகிப்போன சமராடிகளின் இலட்சிய உணர்வுகள் நகர்ந்து சென்று ஆழப்பதிந்து கொள்ளும் என்கிற உண்மைதான் அது. இந்த உள்வாங்கல்கள் ஒடுக்கப்படும் முறையின் வீரியம் அதிகரிக்க மக்களிடையே இலகுவாக தொற்றிக் கொள்ளும். கருத்து மட்டுமல்ல, செயல்களின் வெளிப்பாடுகள் மக்களைப் பற்றிக் கொண்டால் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதனைப் போராட்ட வரலாறுகள் எமது தோளில் தட்டிக் கூறிச் செல்கின்றன.
ஆனால், மக்களிடையே உருவாகும் இத்தகைய கண்ணுக்குத் தெரியாத பண்பு மாற்றங்களை, கிளர்ந்தெழும் போக்கினை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதில் அடக்குமுறையாளர் தடுமாறுகின்றார்கள். இலங்கையின் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண போன்றோருக்கு இந்தப் பதட்டம் எப்போதும் உண்டு.
மக்கள் கிளர்ச்சியை முறியடித்து, அரசின் அதிகாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பதுதான் இத்தகைய புலனாய்வுப் பிதாமகர்களுக்கு ஒடுக்குமுறை அரசு கொடுக்கும் பணி. ஜே.வி.பியின் கிளர்ச்சிக் குழுவானது விடுதலைப் புலிகளின் அனுதாபிகளுடன் கைகோர்க்கப் போகிறார்களென்றொரு புரளியைப் புலனாய்வு அமைப்பின் ஊடாக இலங்கை அரசு கிளப்பிவிட்டிருப்பதைக் காணலாம்.
இந்தக் கிளர்ச்சிக் குழுவின் ரிஷிமூலம் எது வென்று தெரியவில்லை. இருப்பினும் புலிவேடம் போட்டாலும் புலிக்குத் தெரியும் அது நரியென்று. ஆகவே மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு, அரசதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒடுக்குமுறையாளர்கள், எல்லா முகமூடிகளையும் அணிவார்கள். அவர்கள் யாரென்பதைச் சரியாக இனங்காண்பது மக்களின் கடமை. கடந்தகாலப் பட்டறிவுகள் அதற்கான வல்லமையை மக்களுக்கு அளிக்கும் என்பதை ஏற்றுக் கொள்வோம். போரட்டத்தில் ஏற்படும் பாரிய பின்னடைவோடு, எதிரியின் பணி முற்றுப் பெறுவதில்லை. மீதமிருக்கும் எச்ச சொச்சங்களை அழிப்பது, அதற்காக அடிபணிந்து சென்ற பலவீனமானவர்களைப் பயன்படுத்துவது, மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குவது.
ஒரு காலத்தில் தமிழ்த் தேசியம் பேசிய வெற்றுப் பெருங்காய டப்பா வானொலிகளைப் பயன்படுத்தி, ஊடகவியலாளர்களை நோக்கி தேசத் துரோகி, பிரதேசவாதி, சிங்கள உளவாளி, என்கிற பிரசாரத்தை முடுக்கி விடுவது போன்ற நகர்வுகளில் சிங்களப் புலனாய்வு நிறுவனம் ஈடுபடும். இந்த உளவியல் சமரை எதிர்கொள்ள வேண்டியது, சரியான முற்போக்கு சக்திகளின் கடமையாகிறது. இனப் படுகொலைக் கெதிராக சுயாதீன சர்வதேச விசாரணையன்று நடாத்தப்பட வேண்டுமென புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் போராடும் போது, அதனை முறியடிப்பதற்கு, அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிங்களம் சகல வழிகளிலும் முயற்சிக்கின்றது. அதேவேளை பயங்கரவாத நிபுணர் றோகான் குணரெட்னாவும், தனது பங்கிற்கு, சர்வதேச அரங்குகளில் உளற ஆரம்பித்துள்ளார். உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.
இலங்கைச் சிறையிலிருந்த சீதையைக் கண்டேன் என்பது போல, கேபி யைக் கண்டேன், முன்னாள் போராளிகளைக் கண்டேன் என தனது பொய்த் தகவல்களுக்கு சாட்சிகளைத் துணைக்கழைக்கிறார் றோகான். சிங்களப் புத்திஜீவிகள் சிலரின் பௌத பேரினவாத விசுவாசத்தை றோகான் குணரட்ன போன்றவர்களினு£டாக தரிசிக்கலாம். இந்த விசுவாசிகள் வரிசையில், புலம்பெயர்ந்து வாழும் சிறு குழுவொன்றும் அணி சேரப்போகிறது. போரினால் பாதிப்புற்ற மக்களின் மீள் குடியேற்றம் பற்றிப் பேசும் தமிழ்த் தேசியவாதிகள், யாழ் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் குறித்து மௌனம் சாதிக்கிறார்களென்று புலம்பெயர் புத்திஜீவிக் கூட்டமொன்று அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளது.
1995 இல் மக்களும் விடுதலைப் புலிகளும், வன்னி பெருநிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்த காலம் முதல், இற்றைவரை சிங்கள இராணுவத்தின் பிடிக்குள்தான் யாழ்ப்பாணம் இருக்கிறது. ஆகவே கடந்த 17 ஆண்டுகளாக ஏன் இந்த சிங்கள அரசு முஸ்லீம் மக்களை மீள் குடியேற்றவில்லை என்கிற கேள்வியை அவர்களிடமே கேட்க வேண்டும். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எந்தவொரு தமிழ்த் தேசிய அமைப்புக்களும், முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து எதிர்ப்பினை தெரிவிக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். அபிவிருத்திக் கூட்டங்களுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காத வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறீ, முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் பற்றிக் கூட்டமைப்புப் பேசினால், கேட்கவா போகிறார்.
அரசோடு இணைந்து இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் அடிபணிவாளர்களின் கருத்தைக்கூட சிங்களம் செவிமடுக்காதென்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்.
ஆனால் இதற்கொரு பலமான பின்புலம் உண்டு. அதாவது புலம்பெயர் புத்திசீவிச் சிறு குழுவொன்றின் அறிக்கையானது, முஸ்லீம் நாடுகளை குறிவைத்து தயாரிக்கப்பட்ட தொன்றாகக் கருதலாம். பெப்ரவரி 27 இல் இருந்து மார்ச் 23ம் திகதிவரை நடைபெறும் ஐ.நா சபை மனித உரிமைப் பேரவையின் 19வது கூட்டத்தொடரில், இலங்கைப் பிரச்சினை விவாதிக்கப்பட்டால், சிங்கள தேசத்திற்கு ஆதரவாக, அதில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் நாடுகளைத் திருப்த்திப்படுத்தும் வகையில் இவ்வறிக்கை பயன்படுத்தப்படலாம் என்று கருத இடம்முண்டு. இதுவும் ஒருவகையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் முயற்சியின் ஒரு அங்கமாகப் பார்க்கலாம்.
அதேவேளை யாழ்குடாவிலிருக்கும் ஊர்வாரியான அபிவிருத்திச் சங்கங்களிற்கோ, சனசமூக நிலையங்களிற்கோ அல்லது பாடசாலைகளுக்கோ நேரடியாக எந்தவித பொருளுதவிகளையும் வழங்கக் கூடாதெனவும், அவை ஆளுநர் சந்திரசிறியின் அனுமதி பெற்றே நிதிவளங்கள் பரிமாறப்பட வேண்டுமென மாகாண நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்த புத்திஜீவிக் கூட்டம் என்ன சொல்லப்போகிறது?
வன்னியில் 650 ஏக்கர் குடியிருப்பு நிலங்களை பாதுகாப்பு அமைச்சு பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது. இதைப்பற்றி இவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். தமது பூர்வீக மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பூர்மக்களின் அவலநிலை குறித்து ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அம்பாறையில், சிங்கள பேரினவாதிவாதத்தால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம் மக்களின் நிலம் தொடர்பாக எப்போது இவர்கள் பேசுவார்கள்?
பேரினவாத சிங்களத்தின் கொழுந்து விட்டெரியும் உளவியல்ப் பரப்புரை நெருப்பில், தாமாக விழும் விட்டில் பூச்சிகளாக இவர்கள் இருப்பது பரிதாபத்துக்குரியது.
ஆகவே நின்று நிதானித்து, மிக அவதானமாகச் செயல்படும் காலகட்டமிது. பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாக விடுமென்கிற கற்பிதங்கள், சிங்கள தேசத்தால் முன்னெடுக்கப்படும் உளச்சிதைவு வேலைகளின் அடிப்படையாக இருக்கிறது. இத் தடையரண்களை உடைத்துக் கொண்டு மக்கள் முன்னகர்ந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கை உண்டு.
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment