முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வினை கூட்டிணைவாக
ஒருங்குபட்டவகையில் முன்னெடுக்க வேண்டும் எனும் கனேடிய தமிழ் சமூகத்தின்
வேண்டுகோளுங்கிணங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் முன்னெடுத்த
முயற்ச்சி பலனளிக்கவில்லை என நா.த.அரசாங்கத்தின் செயலக செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடா வாழ் தமிழ் மக்களினது கோரிக்கைக்கு அமைவாக கனடிய தமிழர் தேசிய அவையுடன் பேச்சுவாத்தைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதும் கனடிய தமிழ் தேசிய அவை இடைநடுவில் பின்வாங்கிக் கொண்ட காரணத்தினால் இவ் விடயத்தில் சுமூகமான முடிவு எட்டமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடபில் நா.த.அரசாங்கத்தின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம் :
அன்பான கனடா வாழ் தமிழீழ மக்களே!
ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களம் நடாத்திய இனப் படுகொலையின் உச்சக்கட்ட நாட்களை நினைவு கூரும் வகையிலான நிகழ்வுகளை 2012 மே 18 ஆம் நாள் ஒரு பொது நிகழ்வாக, தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் ஒருங்குபட்ட நிகழ்வாக ஒரே இடத்தில் நடாத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதனை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடிய தமிழர் தேசிய அவையுடன் ஏப்ரல் திங்கள் 7ஆம் நாள் முதற்கொண்டு பேச்சுக்கள் நடாத்தி ஆரம்ப உடன்பாடு எட்டப்பட்டதுடன் ஊடகங்களிலும் இந் நிகழ்வு தொடர்பான கருத்துப்பறிமாறல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருந்த போதும் ஒருங்குபட்டவகையில் இந்த நிகழ்வினை நடாத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியில் இருந்து கனடிய தமிழ் தேசிய அவை இடைநடுவில் பின்வாங்கிக் கொண்ட காரணத்தினால் இவ் விடயத்தில் சுமூகமான முடிவு கிட்டவில்லை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
தமிழினத்தின் ஒற்றுமையையும், இனத்தின் விடிவினையும் கருத்தில் கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபட்ட ஏற்பாடுகளுக்கும் இணக்கப்பாட்டுக்கும் என்றும் தயாராக உள்ளது என்பதனை இங்கு மீண்டும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளை ஏனைய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து ‘குவீன்ஸ் பார்க்’ (Queens Park ) முன்றலில் மே18ஆம் நாள் நாடத்தவுள்ளது.
தமிழீழத் தேசிய துக்கநாளை நாம் அனைவரும் நினைவு கூருவதுடன் தமிழீழ விடுதலையினை வென்றெடுப்பதற்கு தொடர்ச்சியாக உழைப்போம் என உறுதி கொண்டிடுவோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment