தமிழக
அரசியல் கட்சித் தலைவர்கள்தான் தமிழ் ஈழம் கோருகிறார்களே தவிர, இலங்கை
தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில்
ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவியுமான சுஷ்மா ஸ்வராஜ்
தெரிவித்துள்ளார்.மதுரையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், “தமிழர் பிரச்னைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, இலங்கையைப் பிளவுபடுத்த தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை” எனவும் குறிப்பிட்டர். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
“சமீபத்தில் எனது தலைமையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலை குறித்து அறிய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அரசின் குழு ஒன்று சென்றது. இலங்கை செல்வதற்கு முன்பே, நாங்கள் சொல்லும் இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம். அங்கு முகாம்களிலுள்ள தமிழர்கள் எங்களிடம் தங்களது துன்பங்களை எடுத்துக் கூறினர்.
இலங்கைத் தமிழர்கள் உணர்வுகள், தமிழ்நாட்டினது உணர்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வு என்று நாம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தோம். தமிழர் சகோதரர்களுக்கு இலங்கையில் உண்மையான அரசியல்தீர்வு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் போர் குறித்து ஆய்வு செய்ய, இலங்கை அரசு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்க மறுப்பது ஏன்? என ராஜபக்சவிடம் கேட்டோம்.
இலங்கை நாடாளுமன்றக் குழு அமைத்து, ஏன் பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடாது என அவரிடம் கேள்வி எழுப்பினோம். இந்த முறையிலான தீர்வுக்கு ஏன் முயற்சிக்கக் கூடாது என தமிழர் பிரதிநிதிகளிடமும் தெரிவித்தோம். தமிழர் பிரச்னைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, இலங்கையில் பிளவை உண்டாக்க இங்குள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை.
ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு தனியான அரசியல் தீர்வு வேண்டும் என்றே கேட்கின்றனர்.நாங்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றதாகவும், இலங்கை ஜனாதிபதியிடம் கைநிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்ததாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அது எனக்கு வருத்தம் தருகிறது.அவர்கள் சொல்வது தவறானது.நான் இந்திய அரசு சார்பில் சென்றதால், மரியாதை நிமித்தமாக ராஜபக்ச பரிசளித்தார்.அந்தப் பரிசை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை.
இந்திய அரசு சார்பில் சென்றதால், எனக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசை, நாடாளுமன்ற கருவூலத்தில் ஒப்படைத்து விட்டேன். இலங்கைக்கு நான் சென்ற பயணத்தின் நோக்கத்தை உண்மையாக நிறைவேற்றி விட்டேன்”என்றார்.
Posted by Nilavan on May 11th, 2012
No comments:
Post a Comment