Lebal

Friday, May 11, 2012

புணானையில் இந்து விக்கிரகங்கள் திருட்டு: யோகேஸ்வரன் எம்.பி. கண்டனம் _







   மட்டக்களப்பு மாவட்டத்தின் பொலநறுவை எல்லையில் அமைந்துள்ள புணானை விநாயகர் ஆலயத்தின் அருகில் பௌத்த பிக்கு ஒருவர் குடியிருக்கும் நிலையில் விக்கிரகங்கள் திருடப்பட்டமை இந்து மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இத்திருட்டுச் சம்பவங்களுக்கு எதிராக தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.


அக்கண்டனத்தில் மேலும் தெரியவருவதாவது:

புணானை மிகவும் பழைமை மிக்க ஓர் இந்துக் கிராமமாகும். அங்கு ஒரு சில பௌத்த குடும்பங்கள் முற்காலத்தில் வாழ்ந்துள்ள போதும் யுத்த சூழலைக் காரணங்காட்டி அவர்கள் சிங்களக் கிராமங்களுக்குக் குடிபெயர்ந்து அரசாங்கம் மூலம் நிவாரணங்களையும் காணி, வீடுகளையும் பெற்றுள்ளனர்.

இவ்வேளை புணானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மிகப் பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

அவ்வாலயச் சூழல் பாதுகாப்புப் படையினரின் முகாமாக விளங்கிய காரணத்தால் அவ்வாலயத்தைப் புனரமைப்பதோ, வழிபடுவதோ அம்மக்களால் முடியாததாக இருந்தது.

தற்போது அப்பகுதியிலிருந்து படைகள் அகற்றப்பட்ட சூழலில் அவ்வாலயத்தை மக்கள் வழிபடச் செல்கின்றனர். இவ்வேளை அங்கு இராணுவ, பொலிஸ் குடியிருப்புகள் இருந்ததால் தற்காலிக வழிபாட்டுத் தலத்தை பாதுகாப்புப் படையினர் தாபித்திருந்தனர் ஆனால், இன்று படையினர் அகன்ற பின் அவ்வழிபாட்டுத் தலத்தைப் புதுப்பித்துள்ளனர்.

விநாயகர் ஆலயத்தின் அருகில் ஒரு பௌத்த பிக்கு குடியமர்ந்துள்ளார். இது பௌத்த மத வெறியகர்களின் ஒரு திட்டமிட்ட செயலாகும். இவ்வேளை ஒரு சில தினங்களுக்கு முன் அங்கிருந்த விநாயகர் ஆலயத்தின் மூல விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.

இத்திருட்டு சார்பாக அவ்விடத்திற்கு ஓர் ஆட்டோ திடீரென வந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில மாதங்களாக இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் திருடப்படும் நிலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக வாகரைப் பிரதேசத்தின் பால்சேனை பெரியசுவாமி ஆலய விக்கிரகங்கள் அண்மையில் திருடப்பட்டன. அதே போன்று பிரதேசத்தின் சில ஆலயங்களிலும் இவ்வாறான விக்கிரக திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே இவ்விடயமாக பொலிஸ் நிலையங்களில் மக்களும், ஆலய நிருவாகத்தினரும் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர். ஆனால், இதுவரை ஆலயங்களில் திருடப்பட்ட எந்தப் பொருட்களும் பொலிஸாராலோ, பாதுகாப்புத் தரப்பினராலோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வேளை பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து, விரைவாக சம்பவங்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துமாறு வேண்டுதல் விடுத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் தற்காலத்திலே ஆரம்பிக்கப்பட்டிருப்பது இந்து சமூகத்தை மிகவும் வேதனைப்படுத்தி வருகின்றது. இந்நிலை தொடர இனியும் அனுமதிக்க முடியாது எனப் பாராளுமன்ற உறுப்பினர் தமது கண்டனத்தில் மேலும் தெரிவித்துள்ளார். 5/10/2012 2:00:01 PM
source: virakesari.lk
 

No comments:

Post a Comment