இலங்கையின்
வடக்கில்கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை
செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம்
எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது.போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி பிபிசியிடம் கூறியுள்ளார்.
பல வருடங்களாக விடுதலைப்புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் உள்ளது.
கடந்த வாரம் நடந்த இந்தக் கொலை குறித்து ஒரு முழுமையான புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அதனை கனடா தொடர்ச்சியாக அவதானித்துவரும் என்றும் தான் முறைப்படியான ஒரு குறிப்பை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளதாக லெவி அவர்கள் கூறியுள்ளார்.
முகமூடி அணிந்த நபர்கள் மகேந்திரராஜாவை தாக்கியதை கிராமத்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுவதாக ஊடகச் செய்திகளும், வடக்கில் உள்ள செய்தி ஆதாரங்களும் கூறுகின்றன.
அவர் தனது கொலையாளிகளிடம் இருந்து தப்புவதற்காக போராடியுள்ளார். அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் கடைகளை வைத்திருந்த செல்வந்தரான அவரது குடும்பம் போர் காலத்தில் கனடாவுக்கு சென்று குடியேறியுள்ளது.
ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட இவரது சொத்துக்கள், தற்போது இலங்கையின் பிரபல அங்காடி கடைகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் மற்றும் ஏனைய சிலரின் கைகளில் இருக்கின்றன.
தனது காணியை மீளப்பெறுவதற்காக இலங்கை வந்த அவர், அதில் ஒரு கட்டடத்தைக் கட்டிக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இவர் இராணுவத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகளின் ஆதரவு ஊடகமான தமிழ்நெட், இவரது நடமாட்டத்தை இராணுவ புலனாய்வுத்துறையினர் கண்காணித்து வந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து அதிகமான கருத்துக்களைக் கூற மறுத்த பொலிஸ் தரப்புப் பேச்சாளர், இந்த விடயம் குறித்த புலனாய்வுகளில் 4 புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரையும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.
Posted by Nilavan on May 12th, 2012
No comments:
Post a Comment