(யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவரும் புலம்பெயர் தமிழர்கள் திரும்பி வந்து
"யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கிறது. சாப்பிடறதுக்கும் குடிக்கிறதுக்கும்
என்னென்ன வேண்டுமோ அதெல்லாம் அங்கு இருக்கின்றன. விலைதான் அதிகம் ஆனால்
டொலருக்கு விலை ஒரு பொருட்டே இல்லை" எனப் புளுகுகிறார்கள்.
இந்தப் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையோர் உறவினர்களைப் பார்க்கவும் காணிபூமிகளை நல்ல விலைக்கு விற்கவும் தங்களது ஊர்க்கோயில் தேர், தீர்த்தம், திருவிழா பார்க்கவும்தான் பெருமளவு பணத்தைச் செலவழித்து அங்கு போகிறார்கள். இவர்களில் யாரும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களைப் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தைப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள்.
கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் (மே 10) என்ற ஊடகம் " Inside Menik Farm A Student's Tale Of The Continuing Hardship In The North" என்ற தலைப்பில் வன்னிக்குப் பயணம் செய்து திரும்பிய இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இரக்க்ஷா (Raksha) வை நேர்காணல் கண்டு எழுதியது. இரக்க்ஷா முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவி ஆவார்.
புலம்பெயர் மக்களில் 90 விழுக்காட்டினர் இந்தப் பாவப்பட்ட மக்களை மறந்துவிட்டனர்.
குறிப்பாகக் கனடாவில் பக்தி வாணிகத்தில் ஓகோ என்று கொடிகட்டிப் பறக்கும் கோயில்கள் கண்ணை மூடிக் காதையும் பொத்திக்கொண்டு விட்டன. தேர், திருவிழா, குடமுழுக்கு, இராசகோபுரம் என வெள்ளிப்பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள். இதனால் யாருக்கும் செப்புக்காசுக்குப் பலன் இல்லை. வன்னியில் இருந்து உதவி கேட்டு வரும் கடிதங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்னிடம் கட்டுக்கட்டாக இருக்கிறது.
அண்மையில் வீசிய புயல் காற்றில் மாணிக்கம் தோட்டத்தில் உள்ள 942 குடிசைகள் சேதமாகின. குடிசைகள் மீண்டும் கட்டப்பட்டாலும் அதில் வாழும் மக்கள் தங்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கெஞ்சிக் கேட்கின்றனர்.
இந்தியாவில் பிறந்த மாணவி இரக்க்ஷா ஜெனிவா படடதாரி கழகத்தில் படிக்கும் மாணவி. முனைவர் பட்டத்துக்கு ஆய்வுக்கட்டுரை எழுத இருக்கிறார். மார்ச்சு 31 அன்று செட்டிக்குளத்தில் புயல் வீசி 942 குடிசைகள் நாசமாக்கப்பட்ட போது அவர் மாணிக்கம் தோட்டத்தில் இருந்தார். நாசமாக்கப்பட்ட வீடுகள் துரிதகதியில் மீள் கட்டப்பட்டாதாகச் செய்திகள் சொன்னாலும் - நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகச் சொன்னாலும் - இரக்க்ஷா "நிலைமை மோசம்" என்கிறார்.
மின்தாக்குதலுக்கு தாயும் மகளும் பலி:
அவர் அணித்தாக இருந்த மருத்தவமனைக்குச் சென்று பார்த்தபோது காயப்பட்ட பலர் இருப்பதைக் கண்டார். ஒரு மின் கம்பம் ஒரு வீட்டின் மீது விழுந்ததால் தாயும் மகளும் மின்தாக்குலுக்குப் பலியானார்கள். இன்னொரு ஆண் நோயாளியின் நெஞ்சில் கூரை விழுந்துள்ளது. வேறொருவருக்குத் தலையில் தையல் போடப்பட்டது. பல பெண்கள் மீண்டும் கூரையைச் சரிசெய்யவில்லை. அதற்குப் பதில் அதைத் தோய்த்த ஈர உடுப்புக்களைக் காயப் போடப் பயன்படுத்துகிறார்கள். கொடுமை என்னவென்றால் அவர்களது பங்கீட்டு உணவு அனைத்தும் பாழாகிப் போய்விட்டது.
இரக்க்ஷா ஓடு பேசியவர்கள் தாங்கள் இரவில் சாப்பிடவில்லை என்றார்கள். புயல் அடித்த அடுத்த நாள் காலை உணவும் உட்கொள்ளவில்லை. விடி காலை 2.00 மணி போலத்தான் முகாமில் இருந்த பள்ளிக்கூடம் தரைமட்டமாக்கப்பட்டது. அருகில் உள்ள தேவாலயமும் அழிந்து போயிற்று. பார்க்கும் இடம் எல்லாம் வெவ்வேறு விதமான வீட்டுப் பொருட்கள் சிதறுண்டு கிடந்தன.
ஆனால் நாம் பேசிய மக்கள் அந்தக் குடிசைகளை மீள் கட்டித்தருமாறு கேட்கவில்லை. "எங்களை எங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதியுங்கள்" என்று மன்றாடினார்கள். " இந்த இடத்தில் 3 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம். இப்போது நாங்கள் எங்களது சொந்தக் கிராமத்தில் சாக விரும்புகிறோம்" என்கிறார்கள்.
அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவில்தான் போரின் போது பலத்த சண்டை நடந்தது. அரசு கண்ணிவெடி அகற்றும் பணி முடிவடையாது இருப்பதே இந்த மக்கள் மீள்குடியமர முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று சொன்னாலும் பயப்பீதியிலும் பிரேமை பிடித்தவர்கள் மாதிரியும் இருக்கும் இந்த மக்கள் அந்தக் கதையை நம்ப மறுக்கிறாகள். தங்கள் கிராமத்தில் உள்ள சொந்த வீடுகளைப் பார்க்கச் சிறுபொழுது அனுமதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்கள் தரைமட்டமாக்கப் பட்டுக் கிடப்பதைப் பார்த்தவர்கள் அவற்றைப் பாதுகாக்க இராணுவம் முயற்சி செய்யவில்லை என்பதையிட்டு கோபத்தில் இருக்கிறார்கள்.
முகாமில் இருக்கும் மக்களது கோபத்துக்கு வேறு காரணமும் இருக்கிறது. கடந்த மார்ச்சு மாத முடிவில் தங்களுக்குரிய உணவுப் பங்கீட்டைப் பெறுமுன் வெற்றுக் கடுதாசியில் கையெழுத்து இடுமாறு கேட்கப்பட்டனர். எதற்காகக் கையெழுத்துப் பெறப்பட்டது என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. பின்புதான் தாங்கள் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிராக வரையப்பட்ட விண்ணபத்தில் தங்களது விருப்பத்துக்கு மாறாகக் கையெழுத்துப் போட்டதைத் தெரிந்து கொண்டார்கள்.
கொடுக்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதால் அவற்றை உள்ளுர் கடைக்காரர்களுக்கு விற்றுவிட்டு அதற்கு ஈடாகச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களை வாங்குவதாகச் சொன்னார்கள்.
நிருபர் இரக்க்ஷா வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்தார். வடக்கில் ஒவ்வொரு குடும்பமும் எப்படி வாழ்க்கைச் சுமையை சமாளிக்கிறார்கள், அவர்கள் முகம் கொடுக்கும் பொருண்மிய மற்றும் சமூக சிக்கல்கள் பற்றி ஆராய்வதே அவரது பயணத்தின் நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தின் போது அவர் 40 க்கும் மேற்பட்ட பெண்களைச் சந்தித்தார். சிலர் நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர் கண்டுகொண்டது என்னவெனில் இராணுவத்துக்கு எதிராகச் சகிக்க முடியாத கோபம் கலந்த பயம் அவர்களிடம் காணப்பட்டதாகும். பலர் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்குரிய பணத்தை இராணுவம் கொடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டினார்கள்.
சாப்பிட்டுவிட்டுக் கைவிரிக்கும் இராணுவத்தினர்:
எடுத்துக் காட்டாக யாழ்ப்பாணத்தில் ஒரு சாப்பாட்டுக் கடைக்காரர் ஒவ்வொரு கிழமையும் இரண்டு முறை ஒரு காவல்துறைக்காரர் 10 பேர் கொண்ட கூட்டமாக வருகிறார்கள். இந்தக் கூட்டம் சில சமயம் உருபா 18,000 பெறுமதியுள்ள சாப்பாட்டைப் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் போய்விடுகிறார்கள்.
உணவுக்குப் போராடும் கிராமத்தவர்கள்:
பல இடங்களில் சமாளிக்க முடியாத பெரிய சிக்கல் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவாகும். குறிப்பாக கிராமங்களில் இது மோசமாக இருந்தது. அவர்களுக்குப் பேருந்தில் பயணம் செய்வதே ஒறுப்பாக இருந்தது. உண்மையில், அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் உணவு போன்றவற்றின் விலைகள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு போகிறது. கிராமத்தவர்கள் அடுத்துள்ள நகரங்களுக்குச் செல்லமுடியாது முடங்கிவிட்டதை உணர்கிறார்கள். கிளிநொச்சியை அடுத்த ஆனைவிழுந்தான் கிராமத்தில் நோயினால் நடக்க முடியாத ஒரு தாயை இரக்க்ஷா சந்தித்தார். அந்தத் தாய் முடமாகிப் போய்விட்ட தனது மகளையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆனைவிழுந்தானை ஒரு நகர் என்று சொல்ல முடியாது. சில வீதிகளும் பக்கத்தில் ஒரு பாரிய இராணுவ முகாமும்தான் இருக்கிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் அன்றாடக் கூலிகள் ஆவர். சிலரைத் தேவாலாயம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. சிலர் தங்கள் உறவினர்களது கருணையில் தங்கியுள்ளனர். "ஒரு வீட்டுக்குக் காசு கிடைத்தால் அதனைப் பங்குபோடலாம் என நினைக்கிறார்கள். இந்த மக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கிறார்கள்" என்கிறார் இரக்க்ஷா.
மீனவர்கள் தொழிலுக்கு ஆபத்து:
கிளிநொச்சிக்கு அருகிலுள்ள இராமநாதபுரத்தில் வாழும் மீனவர்கள் அங்கு ஒரு விமானப்படை முகாம் கட்டப்பட்டு வருவதால் கடலுக்குப் போகும் பாதை அடைக்கப்பட்டு விட்டது எனச் சொல்கிறார்கள். இதனால் தங்களது தொழிலுக்கு ஆபத்தென நினைக்கிறார்கள். "அவர்களது எதிர்காலம் பற்றிக் கேட்டால், அதுபற்றி நினைக்க முடியாது என்கிறார்கள். நாளை என்ன நடக்கும் என்பது பற்றிச் சிந்திக்கத் தெரியாதவர்களாக அவர்களை மாற்றிவிட்டார்கள். அன்றாடம் சீவியம் போனால் போதும் என நினைக்கிறார்கள்" என்கிறார் இரக்க்ஷா. வடக்கில் உள்ள எல்லா மக்களும் வாழ வழியின்றி இருக்கிறார்கள் என்று சொல்வது நேர்மையாக இருக்காது (பலர் ஆசிரியர்களாகவும் கமக்காரர்களாகவும் இருக்கிறார்கள்) என்றாலும் பலர் கொடிய வறுமையில் வாழ்கிறார்கள். இடையில் போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரக்க்ஷா இராமநாதபுரத்ததைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு கதைத்தார். அவரது மகனுக்குக் கல்லீரல் சிக்கல். அதனால் கொழும்புக்கு ஒவ்வொரு மாதமும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இன்னொருவருக்கு ஒரு மகள். கடுமையான ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களில் பலர் பயணச் செலவுக்குத் தங்கள் திருமண நகைகளை அடைவு வைத்துள்ளார்கள். இரக்க்ஷா தான் சந்தித்த பெண்களைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். துன்பத்தின் மத்தியிலும் அவர்களது சாதுரியம் திறமை இரண்டையும் மெச்சினார். "எனக்கு அவர்கள் மீது அதிக மதிப்பு இருக்கிறது. அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதே பெரிய மலைப்பாக இருக்கிறது. சமூக பாதுகாப்பு கொடுப்பனவு மூலமே அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்.
இரக்க்ஷாவும் மற்றவர்களும் கொழும்பில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வடக்கில் வாழும் மக்கள் ஏராளமான சமூக - பொருண்மிய சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் அவர்கள் நினைவில் வைக்கவேண்டிய ஒன்றாகும். வடக்கில் உள்ள பொதுமக்களைப் பொறுத்த மட்டில் வாழ்க்கை என்பது இன்னும் ஒரு நாளாந்தப் போராட்டம்தான்.
-இரய்சா விக்கிரமதுங்க- (தமிழாக்கம் - நக்கீரன்)
No comments:
Post a Comment