Lebal

Wednesday, July 04, 2012

17 உதவிப் பணியாளர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அழுத்தம்

ACF-massacreமூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 உதவிப் பணியாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பிரெஞ்சு தொண்டர் நிறுவனமான அக்சன் பெய்ம் நிறுவனத்தில் பணியாற்றிய இந்த 17 பணியாளர்களும், கடந்த 2006ம் ஆண்டில் மூதூரில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையின் போது படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலைகள் குறித்து மீள்விசாரணை நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இந்தநிலையில் சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசோன் சிறிலங்கா சட்டமா அதிபரைச் சந்தித்து இந்தப் படுகொலைகள் குறித்த மீள்விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பாக விசாரித்துள்ளார்.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, 17 பேரினதும் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குவதன் மூலம் இந்தப் படுகொலை தொடர்பான அனைத்துலக அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவினால் தப்பிக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் பலவும் சிறிலங்கா அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment