Thursday, February 13, 2014

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா காலமானார்

தென்னிந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், ஈழத்தமிழருமான பாலு மகேந்திரா தனது 74 வது வயதில் இன்று மதியம் சென்னையில் காலமானார்.
இன்றுகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பயனளிக்காமல் மதியம் காலமானதாக அவரது உதவியாளர் அறிவித்துள்ளார்.


மட்டக்களப்பு அமிர்தகழியில் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற இயற்பெயருடன் பிறந்த பாலு மகேந்திரா, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் இளமைக்கல்வியைக் கற்றார்.

பட்டப்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்ட அவர், புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில், சினிமா ஒளிப்பதிவுப் படிப்பை மேற்கொண்டார்.

பின்னர், தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படங்களில் அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராகத் தன்னை நிலை நிறுத்தினார்.

அத்துடன், மூன்றாம் பிறை, வீடு உள்ளிட்ட தேசிய விருது பெற்ற பல படங்களை அவர் இயக்கியதன் மூலம், மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக சினிமா ரசிகர்களால் மதிக்கப்பட்டு வந்தார்.

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா.

தமிழ் தவிர மலையாள ,கன்னடப் படங்களையும் இயக்கியுள்ள, இவர், தலைமுறைகள் என்ற திரைப்படத்தை இயக்கி அண்மையில் அது திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment