உள்நாட்டுப்
போரின் போது இடம்பெற்ற பயங்கரமான குற்றங்களுக்குப்
பொறுப்புக்கூறுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் போதுமான
நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறிலங்காவைக் கண்டிக்கும் தீர்மானம் மீது,
இன்னும் சில வாரங்களில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வாக்களிக்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடனான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் அண்மைய சந்திப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் மென்போக்கை வெளிப்படுத்துவதாக சிலர் விளக்கமளித்துள்ளனர்.
அப்படியல்ல, இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் இருதரப்பு பேச்சுக்களில் நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங்கும் அதையே செய்தார்.
யாழ்.குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையை கொழும்பு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு அவர் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
குடாநாட்டில் போரின் உச்சக்கட்டத்தில் நிலைகொண்டிருந்த, படையினரின் எண்ணிக்கையை ராஜபக்ச அரசாங்கம் குறைத்துள்ள போதிலும், தற்போதும் அங்கு இராணுவத் தலையீடுகள் அதிகமாகவே உள்ளன.
தமிழ்ப் பிரிவினை கிளர்ச்சி மீண்டும் ஏற்படும் சாத்தியம் இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு படையினர் தேவை என்று கொழும்பு நியாயப்படுத்துகிறது.
ஆனால், இந்த அச்சம் மிகையானதாகவே உள்ளது, அங்கு விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை.
உண்மையில், யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் தான், தமிழர் மத்தியில் கோபத்தை பற்றியெரியச் செய்கிறது.
யாழ்ப்பாணமெங்கும் இராணுவம் நிறைந்துள்ளதானது, தமிழர்களுடன் நல்லிணக்கத்தைத் ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை ஒரு தொலைதூரக் கனவாகவே மாற்றியுள்ளது.
வடக்கை இராணுவ மயப்படுத்தும் தமிழர்களின் கவலைகளுக்கும், முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், ராஜபக்ச அரசாங்கம் பதிலளிக்கத் தயங்குவதாலும், இந்தியாவும் அனைத்துலக சமூகமும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை போன்ற அரங்குகளில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக்கூற வலியுறுத்தி இரண்டு தடவைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்தது.
இந்த ஆண்டும் அவ்வாறே செய்யக் கூடும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கொழும்பு சிறியளவிலான முயற்சிகளையே முன்னெடுத்துள்ளது.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையுடன் ராஜபக்ச அரசாங்கம் வேண்டாவெறுப்பாகவே செயற்படுகிறது.
இனப்பிரச்சினைக்கு சொந்தமாக அரசியல்தீர்வு காண்பதற்கு ராஜபக்ச தவறிவிட்டார்.
அதைச் செய்வதற்கு இந்தியா இருதரப்பு பேச்சுக்களை மூலம் முயற்சித்தது.
அது பயனளிக்கவில்லை என்பதால் தான், புதுடெல்லி அனைத்துலக அரங்குகள் நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று.
ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அனைத்துலக கண்டனங்கள் மூலம் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்ற போது கூட, அதனுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவது, இலங்கைத் தமிழர்கள் உரிமைகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கக் கூடும்.
(பெங்களூருவைத் தலைமையகமாக கொண்டு வெளிவரும் டெக்கன் ஹெரால்ட் நாளிதழின் ஆசிரியர் கருத்து.)
No comments:
Post a Comment