Friday, March 28, 2014

தமிழ்மக்களின் உறவில் தொப்புள்கொடி உறவு, இந்தியா என்று நம்பி இருந்த மக்களுக்கு இந்தியா செய்த சதி

News Serviceஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காதது ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசியதற்கு ஒப்பானது என்று பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். “ கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா இம்முறையும் ஆதரவாக வாக்களிக்கும் என்ற நம்பிக்கையுடனே உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பையும் மீறி தமக்கு மாத்திரம் சாதகமான முடிவினை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இந்தியா ஏமாற்றி நடுக்கடலிலே விட்டுச் சென்றிருக்கின்றது.

   இலங்கையிலே வாழ்கின்ற தமிழ்மக்களின் உறவில் தொப்புள்கொடி உறவு இந்தியா என்று நம்பி இருந்த மக்களுக்கு இந்தியா செய்த சதி வேலையால் அந்த புனிதமான உறவை சொல்வதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாக பலநாடுகள் வாக்களித்திருந்தன. அத்தோடு சில நாடுகளும் எதிராகவும் வாக்களித்திருந்தன. ஆனால் இரண்டும் கெட்டான் நிலையில் மீதமான நாடுகள் விலகி இருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியாவும் விலகியிருந்தது. அதுதான் தமிழ்மக்கள் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்த வாக்கெடுப்பில் இந்தியா இந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருக்குமானால் இன்னும் பல நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கும். இது அனைத்து தமிழர்களுக்கும் செய்த மிகப்பெரும் துரோகமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
வடகிழக்கு மக்களுக்கான இணைந்த தாயகத்தில் நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்காக 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மாகாணசபை முறைமையும் கொண்டு வரப்பட்டது. அது மாத்திரமல்ல எமது இளைஞர்களை ஒன்றிணைத்து பயிற்சிகள் வழங்கி ஆயுதங்களைக் கொடுத்து போராட்டத்திற்கு இட்டுச்சென்று இறுதியில் அதே இளைஞர்களை கொன்றொழிப்பதற்கும் இதே இந்தியாதான் உந்து சக்தியாக இருந்தது என்பதனை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 வருடங்களுக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி யினரால் நீதிமன்றத்தில் இணைந்த வடகிழக்கைப் பிரிப்பதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இணைந்த வடகிழக்கு இரண்டாக துண்டாடப்பட்டது. அன்று இதனை இணைக்க வேண்டும் என்று பாடுபட்ட இந்தியா இதனை கவனத்தில் எடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்தது.

No comments:

Post a Comment