இன்றைய விசாரணையின் போது சாட்சியளித்த களுவன்கேணியைச் சேர்ந்த 7
பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தங்கராசா அவர்கள், கருணா அம்மானின்
''வீட்டுக்கு ஒரு பிள்ளை'' என்ற திட்டத்தின் கீழ் அவரது ஆட்களினால் தனது
இரு பிள்ளைகளும் பிடித்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்..சிறு வயதிலே
பிடித்துச் செல்லப்பட்ட தனது இரு பிள்ளைகள் தொடர்பில் அவர்தான் பதில் தர
வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய அமர்வின் போது
சாட்சியமளிக்க வந்தவர்களில் பலரது சாட்சியங்கள் கிழக்கு மாகாணம்
விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாகவே இருந்தது.
பாவற்கொடிச்சேனையை சேர்ந்த 34 வயதான தவராசா உத்தரை அவர்கள், 2009 மார்ச்
மாதம் 3 ஆம் திகதி தனது கணவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு,
காணாமல் போயுள்ளதாக தனது சாட்சியத்தில் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு புலனாய்வு துறையினரால் அழைக்கப்பட்டு
வாக்கு மூலமொன்று பெறப்பட்டு மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்குதல்
தொடர்பாக கூறப்பட்டாலும் அதனை தான் மறுத்து விட்டதாகவும் தனது
சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில்
காணாமல் போனவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட 400 இற்கும் மேற்பட்ட
முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் தெரிவு செய்யப்பட்ட 54
பேரின் முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனையோரின்
முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment