Lebal

Tuesday, March 25, 2014

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்தால், இந்தியாவுக்கு சிறிலங்கா வைக்குமாம் ஆப்பு


ஜெனிவாவில், தமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்த ஆண்டும் இந்தியா ஆதரித்தால், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பிரச்சினையை சிறிலங்கா எழுப்பவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவும், விசாரணை நடத்தவும் வலியுறுத்தும் தீர்மானம், மீதான வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.


இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்தை ஆதரித்தே இந்தியா வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தால், இந்தியாவின் பொறுப்புக்கூறல் பிரச்சினையை பெரும்பாலும் சிறிலங்கா எழுப்பும் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவில் பிரிவினைவாதத்துக்கு ஊக்கமளித்தது, இந்தியப் படைகளின் தலையீடுகள், தமிழ்த் தேசிய இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தலாம் என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், இந்தியாவினது தலையீடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment