Lebal

Tuesday, March 04, 2014

உத்தேச தீர்மானத்தில் தீர்ப்பு: போர்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் !


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரி;க்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விடவும் இந்த தீர்மானம் வலுவானது என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென முதலில் தயாரிக்கப்பட்டிருந்த உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

எனினும், நேற்றைய தினம் வெளியான உத்தேச தீர்மானத்தில் நவனீதம்பிள்ளையின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுமென தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை என வெளியாகியுள்ள உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை இன்னமும் தயாரிக்கப்படவில்லை எனவும், இந்த மாத இறுதியில் அமர்வுகளில் உத்தியோகபூர்வமாக இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment