மியான்மரில்,
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வரும் 969 இயக்கத்தின்
தலைவரான, அஷ்வின் விராது தேரர், சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்காவில் உள்ள பௌத்த அடிப்படைவாத அமைப்பான, பொதுபல சேனாவின் அழைப்பின் பேரிலேயே விராது பிக்கு கொழும்பு வரவுள்ளார்.
'பௌத்த தீவிரவாதத்தின் முகம்' என்று 'ரைம்' சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்டவரே விராது பிக்கு.
அவரது ஒளிப்படம் தாங்கிய முகப்பு அட்டையுடன் வெளியான ரைம் சஞ்சிகையை சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
“நாம் அவரை அழைத்துள்ளோம். அவர் வரவுள்ளார். அவரை நாம் சந்திக்கவுள்ளோம்.
அவ்வளவு தான். அவர் இங்கு எவ்வளவு காலம் தங்கியிருப்பார் என்று ஊடகங்களுக்கு கூற வேண்டியதில்லை.
நாம் பொருத்தமான நேரத்தில் அதனை வெளிப்படுத்துவோம்.” என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விராது பிக்கு வருவது உறுதியே என்றும் அவரது வருகை தொடர்பான நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பொதுபல சேனாவின் கல்வி ஆராய்ச்சி அலகின் தலைமை இணைப்பாளர் சமில லியனகே தெரிவித்துள்ளார்.
“முஸ்லிம்களின் வன்முறைகளாலும், ஏனைய மதங்களினாலும். ஆசியாவில் உள்ள பௌத்த நாடுகள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.
உதாரணத்துக்கு தாய்லாந்து, மியான்மர், பங்களாதேஸ் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.
மியான்மரின் 969 இயக்கத்தை விராது பிக்கு ஆரம்பிக்க இதுவே காரணம்.
நாம் தாய்லாந்து, மியான்மர் மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றோம்.
பௌத்த சமூக அமைப்புகளினதும், பௌத்த விற்பன்னர்களையும் கொண்டதாக அனைத்துலக அமைப்பை நாம் நிச்சயம் உருவாக்க வேண்டும்.
விராது பிக்குவின் வருகையில் போது குறைந்தபட்சம் பிராந்திய அமைப்பு ஒன்றை உருவாக்கும் மூலோபாயத் திட்டம் குறித்தேனும் ஆராயவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment