Lebal

Tuesday, March 25, 2014

கூட்டமைப்புடன் பேசுவதே அரசுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு! – என்கிறார் தயான் ஜெயத்திலக. [Tuesday, 2014-03-25 06:09:07]

News Serviceஅரசுடன் நேரடியாகப் பேசத் தயார் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பு, ஜெனீவாவில் தன்னை மேலாக நிலைப்படுத்திக் கொள்வதற்கு அரசுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையின் உள்ளடக்கத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், அது முடியாது போனால் கூட, தோல்வியின் இடைவெளியைக் குறைப்பதற்கேனும் அது உதவும். தமிழ்க் கூட்டமைப்பின் அழைப்புக்கு ஒரு சாதகமான பதிலை விரைந்து அனுப்புவது உயிர் மீண்டது போலான நன்மையைப் பயக்கலாம் என்கிறார் கலாநிதி தயான் ஜெயதிலக.ஐ.நா. சபையின் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னர் பணியில் இருந்தவர் கலாநிதி தயான் ஜெயதிலக.

   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் இருக்கும் வடக்கு மாகாண சபை மஹிந்த ராஜபக்‌ஷவின் மத்திய அரசாங்கம் தம்மோடு நேரடியாகப் பேசவேண்டும் என்று ஒரு பிரேரணையை முன்வைத்து அண்மையில் அதனை ஏகமனதாக நிறைவேற்றியும் இருந்தது.அந்த அழைப்புக்கே சாதகமான ஒரு பதிலை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைக்கும் கலாநிதி ஜெயதிலக, இந்தப் பேச்சுக்கள் எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்கனவே 2011 இல் தொடங்கி நடந்து, பின்பு இடைநின்று போனவைதான் என்பதையும் குறிப்பிடுகின்றார்.
இந்த வாரம் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் வாக்கெடுப்பிற்கு முன்னதாக இந்தப் பேச்சுகள் தொடங்காது விடினும் கூட, அல்லது பேச்சுகள் மீளத் தொடங்குவது பற்றிய அறிவித்தல் அதற்கு முன்னர் விடுக்கப்படாது விடினும் கூட, இந்தப் பேச்சுகள் தொடங்கப்படுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுவதும் மிக முக்கியமானவை என்று அவர் கருதுகிறார்.
குறிப்பாகச் சொல்வதானால் - இந்த உலகத்துடன் தனக்கு இருக்கும் பிரச்சினையைக் கையாள்வதற்கும் அவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்கும் மூலமாக இலங்கை மத்திய அரசாங்கத்துக்கு இருப்பது, வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தைக் கையாள்வதும் அதற்கு ஒரு தீர்வைக் காண்பதும்தான் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
தற்போது இருக்கின்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி - தமிழ் தேசியக் கூட்டமைப்போடும் வடக்கு மாகாண சபையோடும் நேரடியாக உரையாட இலங்கை மத்திய அரசாங்கம் முன்வரவில்லையானால், விரைவில் தமிழகத்தில் நிகழவிருக்கும் மாபெரும் அரசியல் எழுச்சியின் பன்முகப் பரிமாணத்துக்குள் அது சிக்குப்பட நேரும் என்று குறிப்பிடுகின்ற கலாநிதி தயான் ஜெயதிலக, நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின்பு இருக்கப்போகின்ற தமிழ்நாட்டை விடவும், இப்போது இருக்கின்ற தமிழ் நாடு செல்வாக்குக்கு உட்படுத்தப்படக்கூடியதாக இருக்கின்றது என்கிறார்.
ஜெயலலிதாவையும் மோடியையும் சமாளிப்பதை விடவும், சம்பந்தனுடனும் விக்னேஸ்வரனுடனும் அரசியல் செய்வது சுலபமானதாகவிருக்கும். இதை கொழும்பு விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
ஜெனீவாவுக்குப் பின்னர் சர்வதேச விசாரணையையும் சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கும் ஜெயலலிதாவையும் இருமுனைகளில் எதிர்கொள்வதை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவது மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் சொல்கிறார்.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் சந்திக்கப் போகின்ற படுதோல்விக்குப் பின்னர் - போர்க் குற்றங்கள் மீது தொடங்கப்போகின்ற சர்வதேச விசாரணைக்குப் பின்னர் - தமிழ்நாட்டை ஒரு முக்கிய பங்காளியாகக் கொண்ட மத்திய கூட்டாட்சி அரசாங்கம் ஒன்று இந்தியாவில் உருவாகியதன் பின்னர் - ஒட்டுமொத்தமான இலங்கைத் தமிழ் அரசியலின் செயற்பாட்டு முறைமை ஒரு முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் பதிவாகப் போகின்றது. அது கட்டுப்பாட்டை மீறி அளவு கடந்து சுழன்று எழலாம் என்று எதிர்வு கூறுகின்ற கலாநிதி ஜெயதிலக, இந்த இறுக்க நிலையிலிருந்து உடைத்து வெளியேறுவதற்கு இருக்கும் ஒரே வழி ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கும் தமிழ் அரசியல் தலைமைக்கும் இடையில் நிகழக்கூடிய ஓர் இதயசுத்தியான அரசியல் உரையாடல்தான் என்றும் பரிந்துரைக்கின்றார்.
இந்த விடயத்தில் நாம் எதிர்கொள்கின்ற உடனடிப் பிரச்சினை பரஸ்பர நம்பிக்கைப் பற்றாக்குறைதான் என்று அவர் சொல்கின்றார். இரண்டு தரப்பினருமே ஒருவரை அடுத்தவர் நம்பவில்லை என்பது புரிந்து கொள்ளத்தக்கதுதான் என்று குறிப்பிடும் கலாநிதி ஜெயதிலக, முன்னைய பேச்சுக்கள் ஏன் முறிவடைந்தன என்று கேட்பதும் அதன் காரணத்தைக் கண்டறிவதும் அவ்வாறு திரும்பவும் நிகழாமல் தடுப்பதும் இங்கு முக்கியமானவை என்றும் கருதுகின்றார்.
இந்த விவகாரத்தோடு ஏதோவொரு வகையில் தொடர்பில் இருந்தவன் என்ற வகையில் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுக்கள் முறிந்தமைக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பான நான்கு காரணங்கள் இருப்பதாகத் தான் உணர்கின்றார் என்றும் அவர் சொல்கின்றார்.
1) ஒரு தரப்பின் எதிர்பார்ப்புகளுக்கு மாறானவையாக இருந்துவிட்ட மறுதரப்பின் செயற்பாடுகளும், உடனடியாகவே இரு தரப்பிலும் இருந்தே கடும்போக்குவாதிகளால் அவை தூக்கிப் பிடிக்கப்பட்டுப் பிரச்சினையாக்கப்பட்டமையும்
2) இலங்கைக்கு உள்ளும் சர்வதேச மட்டத்திலும் இருந்த சக்திகளுக்கு இடையிலான உண்மையான ஏற்றத் தாழ்வைச் சரிவரக் கிரகித்துக் கொள்ளத் தடையாக - யதார்த்தைத்தை விளங்கிக் கொள்வதில் இரு தரப்பிடமும் இருந்த குறைபாடு
3) பேச்சுக்களைக் குழப்புவதற்கும் நிலைமையைச் சூடாக்குவதற்குமாக இரு தரப்பிலிருந்தும் சுயநலமிகளால் திட்டமிட்டும் நிதானமாகவும் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள்.
4) சிவில் சமூகத்திலும் புலம்பெயர்ந்த சமூகத்திலும் வளைந்து கொடுக்கத் தயாரற்று இருக்கும் பிடிவாதக்காரர்களினால், அடி மட்டத்திலிருந்தும் நாற்புறத்திலிருந்தும் போடப்பட்ட அழுத்தங்கள்.
-இவ்வாறான ஒரு பின்னணியில் நிபந்தனையற்ற பேச்சுக்களை மீளவும் தொடங்கி, அதனைப் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வது எப்படி?இவ்வாறு நான்கு காரணங்களையும், ஒரு கேள்வியையும் முன் வைக்கின்ற கலாநிதி ஜெயதிலக, அதற்கான தமது பதிலையும் பின்வருமாறு தருகின்றார்
"அவ்வாறான ஓர் இதய சுத்தமான அரசியல் பேச்சுக்களைத் தொடங்கி, அதனை உரிய வழித்தடத்தில் இட்டுச் செல்வதற்கு என்னால் சிந்தித்துப் பார்க்கக்கூடியதாக இருக்கின்ற ஒரே வழி - வெளியாரின் அனுசரணை.துல்லியமாகச் சொல்வதானால் - உண்மையான அக்கறை உடைய நான்கு வெளித் தரப்புக்களை ஒருங்கிணைத்து உள்ளடக்கி 'கூட்டு அனுசரணையாளர்'களாக நியமித்து, அவர்களது துணையுடன் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்.அவ்வாறான ஒரு கூட்டு முயற்சிக்கு என்னால் பரிந்துரைக்கக்கூடிய நான்கு வெளித் தரப்புக்கள் தென் ஆபிரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா. பேச்சுக்களுக்கு அனுசரணை செய்யும்படி இந்த அரசுகளை இலங்கை ஆட்சியாளர்கள் அழைப்பதுடன், பேச்சுகளுக்கான ஓர் இறுக்கமான கால அட்டவணைக்கும் அவர்கள் இணங்குவார்களானால், ஜெனீவாவில் எமது ஒருங்கிணைந்த உறுதியளிப்பைச் செய்ய முடியும்.
அதன் மூலம் மூக்கை நுழைக்கும் விதமானதும் பங்கப்பட்டதுமான ஒரு சர்வதேச விசாரணையை நீர்த்துப் போகச் செய்யலாம்"இவ்வாறு நம்பிக்கை தெரிவிக்கின்ற கலாநிதி தயான் ஜெயதிலக 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பில் அதிருப்தி கொள்கின்ற அரசுகளோடு கோபிக்க முடியாது என்றும், இலங்கையில் நம்பிக்கை வைக்கத் தயங்குகின்றமைக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோடு கோபிக்க முடியாது என்றும் கூறுகின்றார்.
இந்த நிலையில், முன்னகர்வதற்கான ஒரே வழியாக இருப்பது - வெளித்தரப்புக்களின் அனுசரணையுடன் தமிழ்க் கூட்டமைப்போடு பேச்சுக்களைத் தொடங்கி, தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு இறுக்கமான ஒரு கால வரையறையை வழங்குவது.அந்த கால வரையறை - ஆறு மாத காலமாக இருக்கலாம்: 2014 செப்ரெம்பரில் நடைபெறவுள்ள அடுத்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் வரையான 6 மாதங்களாக இருக்கலாம். - என்று சர்வதேச சமூகத்திடமும் யோசனையை முன் வைக்கின்றார் கலாநிதி ஜெயதிலக.
source:seithy

No comments:

Post a Comment