Lebal

Thursday, April 17, 2014

கர்நாடகத்தில் களமிறங்கும் 5 தமிழ் வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 5 தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
கர்நாடகத்தில், 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. பெங்களூருவில் சுமார் 40 லட்சம் தமிழர்களும், மாநில அளவில் சுமார் 90 லட்சம் தமிழர்களும் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், தமிழர்களின் மக்கள் தொகைக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றகுறை தமிழர்களின் மனதில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை போல மக்களவைத் தேர்தலிலும் தமிழர்களை நிறுத்த வேண்டும் என்பது தமிழர்களின் பொதுவான கருத்தாக இருந்தாலும், இதை அரசியல் கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
கடந்த 15 மக்களவைத் தேர்தல்களில் பெங்களூரு தொகுதிகளில் எம்.சுந்தர், ஆறுமுகம், தர்மலிங்கம், கிளமென்ட் ஜோசப், கோலார் தொகுதியில் சி.எம்.ஆறுமுகம், ஆர்.ஏ.தாஸ் போன்றோர் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர்.

இந்த நிலையில், தமிழர்களுக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்குமாறு காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம், தனித் தமிழர் சேனை போன்ற அமைப்புகள் வலியுறுத்தின. இதற்கு செவிகொடுத்த மஜத, பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து மாற்று நோபல் பரிசு பெற்றுள்ள சமூக சேவகி ரூத்மனோரமாவை களமிறக்கியது.
தினக்கூலித் தொழிலாளர்கள், குடும்ப வேலையாள்கள், ஏழை பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மக்களிடையே பிரபலமாக உள்ள ரூத்மனோரமாவுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான தேவகெளடா, பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர்களின் ஆதரவைக் கோரினார்.
அதேபோல, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட வி.பாலகிருஷ்ணனுக்கு, ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பளித்துள்ளது.
பாலகிருஷ்ணனும் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து தமிழர்களின் ஆதரவை கேட்டார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட வி.வேலுவுக்கும், சமாஜ்வாதி கட்சி சார்பில் கோலார் தொகுதியில் போட்டியிட வள்ளல்முனுசாமிக்கும், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட விஜயகுமாருக்கு சிபிஐ கட்சி சார்பிலும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் வேட்பாளர்களாக ரூத்மனோரமா (பெங்களூரு தெற்கு-மஜத), வி.பாலகிருஷ்ணன் (பெங்களூரு மத்திய-ஆம் ஆத்மி கட்சி), வி.வேலு (பெங்களூரு வடக்கு-பகுஜன்சமாஜ்), வள்ளல் முனுசாமி (கோலார் - சமாஜ்வாதி கட்சி), விஜயகுமார்
(சிக்மகளூர் - சிபிஐ) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
source:dinamani
First Published : 17 April 2014 05:31 AM IST


No comments:

Post a Comment