Monday, April 28, 2014

அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் மாத்தளை எலும்புக் கூடுகள்

mattala_elumkkoodu_001மாத்தளை மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வுக் கூடம் ஒன்று இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாத்தளையில் பல மாதங்களுக்கு மனித புதைகுழி ஒன்று பற்றிய தகவல்கள் கிடைத்தன. இதன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. அந்த புதைக்குழியில் இருந்து பல எலுப்புக் கூட்டின் பகுதிகள் மீட்கப்பட்டன.

இது சம்பந்தமாக கார்பன் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டியதாக இருந்தது. இதனையடுத்து கார்பன் பரிசோதனைக்கான உலகில் சிறந்த ஆய்வுக் கூடங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடாவில் மயோமி சர்வதேச ஆய்வுக் கூடம் இது சம்பந்தமான ஆய்வுகளை நடத்த விருப்பம் தெரிவித்தது.
அந்த ஆய்வுகள் சம்பந்தமான கடிதம் நேற்று கிடைத்துள்ளது. இதனடிப்படையில் எலும்புக் கூடுகளில் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவற்றை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் வயது, இறந்த காலம் என்பவற்றை கண்டறிய இந்த கார்பன் பரிசோதனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
1980 ஆம் ஆண்டுகளில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 150க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எச்சங்கள் மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்த மனித புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன.
1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஜே.வி.பியின் கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
1988 ஆம் 1989 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சி காலத்தில் மாத்தளை வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியில் இருந்த முகாமுக்கு பொறுப்பான அதிகாரியாக இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment