தீவிரவாத
செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், மற்றும்
424 தனிநபர்களைத் தடை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை,
அமெரிக்காவும் புறக்கணித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று
தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த தடையை தாம் கருத்தில் கொள்ளப்
போவதில்லை என்று கனடா அறிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாடாக
அமெரிக்காவும் இந்த தடையைப் புறக்கணித்து புலம்பெயர் தமிழர் குழுக்களுடன்
பேச்சு நடத்தியுள்ளது.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களின் தொகுப்பு-
கடந்த
வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடந்த இந்தச்
சந்திப்பில், சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட பட்டியலில்
இடம்பெற்றிருந்த சிலரும் பங்குபற்றியுள்ளனர்.
இவர்கள், தெற்கு
மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்
உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இந்தச்
சந்திப்பை, சிறிலங்கா அரசாங்கத்தின் தடைப் பட்டியலில் இடம்பெறாத,
அமெரிக்காவில் செயற்படும் தமிழ் அரசியல் நடவடிக்கைப் பேரவை என்ற அமைப்பு
ஒழுங்கு செய்திருந்தது.
இதுதொடர்பாக நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
“உதவி
இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் சில சிறிலங்கா சிவில் சமூகப்
பிரதிநிதிகளை இராஜாங்கத் திணைக்களத்தில் சந்தித்திருந்தார் என்பதை
உறுதிப்படுத்துகிறேன்.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை
குறித்தும், சிறிலங்கா மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று
கலந்துரையாடுவதற்காகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அரசாங்க
மற்றும் தனியார் துறையினருடனான சந்திப்புக்கு மேலதிகமாக, சிறிலங்காவின்
சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் நாம் பரந்துபட்டளவில்
கலந்துரையாடுவது வழக்கம்.
அந்தவகையில் இது அண்மையில் நடந்த கலந்துரையாடல்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இயங்கும் தமிழ் அரசியல் நடவடிக்கைப் பேரவை தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல.
எனினும், லண்டனைத் தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை தடை செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா
மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு ஆதரவாக உலகத் தமிழர் பேரவை மற்றும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ் அரசியல்
நடவடிக்கைப் பேரவையும் உறுப்பு நாடுகள் மத்தியில் பரப்புரைகளை
மேற்கொண்டிருந்தது.
அத்துடன் தமிழ் அரசியல் நடவடிக்கைப் பேரவையின்
முன்னாள் தலைவர் எலியாஸ் ஜோசப் ஜெயராஜாவினது பெயரும், சிறிலங்கா
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட தடைசெய்யப்பட்ட 424 தனிநபர்களின் பட்டியலில்
உள்ளது.
அவரும் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.
சுமார்
ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.நா
மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து
எழுந்துள்ள விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிகாரிகள் சிலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில்
பங்கேற்ற சிலர், சிறிலங்கா தலைமை தாங்கும் கொமன்வெல்த் அமைப்புக்கான
நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி அமெரிக்கா என்ன செய்யத்
திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறிலங்கா அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன.
கிரிமியாவை
ரஸ்யாவுடன் இணைத்த விவகாரத்தை அடுத்து, குறிப்பிட்ட ரஷ்ய அதிகாரிகளுக்கு
அமெரிக்கா விதித்துள்ள தடைகளைப் போன்று சிறிலங்கா மீதும் தடை விதிக்க
வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய
நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு சிறிலங்கா விவகாரத்தில் எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்தும் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்தச்
சந்திப்பில் பங்கேற்ற 6 அமைப்புகளின் 15 பிரதிநிதிகளுக்கு, தமது சிறிலங்கா
பயணம் குறித்து நிஷா பிஸ்வால் விபரித்துக் கூறியுள்ளார்.
சிறிலங்கா
அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்தும் அவர்
ஏமாற்றம் வெளியிட்டுள்ளார். என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ்
தெரிவித்துள்ளது.
source:pp |
No comments:
Post a Comment