பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைத்தீவின் ஆட்சியத்pகாரத்தினை சிங்களவர்கள்
பெற்றுக் கொண்டனர். தீவை விட்டுப் பிரித்தானியர்கள் வெளியேறிய நாள்
தொடக்கம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் வேலைத்திட்டங்களை
சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்தியே வந்தனர். இந்த
அழிப்பிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள அகிம்சை
வழியில் தமிழ் அரசியல் தலைமைகள் மேற்கொண்ட ஜனநாயக வழிப் போராட்டங்கள்
முழுமையாகத் தோல்வியடைந்தது. அதனால் தமிழ் மக்கள் தமது தேசத்தின் இருப்பை
பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அரசியல் விடுதலைக்கான தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக இலங்கை அரசு சர்வதேச சமூகத்திற்கு சித்தரித்தது. சர்வதேச நாடுகள் உண்மைகளை அறிந்திருந்தபோதும் தத்தம் பூகோள அரசியல் நலன்களுக்காக இலங்கையில் ஆட்சியாளர்களை தமது கைகளுக்குள் போட்டுக் கொள்வதற்கு வசதியாக இலங்கையில் ஓர் அதிகார மையம் மட்டும் இருப்பதனையே விரும்பினர். அந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தை அமைதியாகவிருந்து அனுமதித்தனர்.
பயங்கரவாதத்தை அழித்தல் என்ற போர்வையில் 21ம் நூற்றாண்டில் மனித குலத்திற்கு எதிரான சகல குற்றங்களையும் புரிந்தவாறு இந்த உலகின் கண்களின் முன்னால் இலங்கை அரசு மாபெரும் இனப் படுகொலையை வாகரையிலும் வன்னி மண்ணிலும் நிகழ்த்திக் கொண்டிருந்தது. நடக்கப் போகும் பேரனர்த்தத்தை புரிந்து கொண்டு உலகம் முழுவதும் வாழ்ந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தமிழக உறவுகளும் மொறீசியஸ் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் தமது நாடுகளிலும் பல மாதங்களாக வன்னியில் அரங்கேறிக் கொண்டிருந்த இன அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். யுத்த நிறுத்தம் கோரி பலர் தமக்குத் தாமே தீமூட்டித் தம்முயிரைத் தியாகம் செய்திருந்தனர்.
எனினும் தமது பூகோள அரசியல் நலன்களுக்காக வலிமைமிக்க நாடுகள் மௌனமாக இருந்தன.
யுத்த சூனியப் பிரதேசங்களை அரசாங்கமே அறிவித்து அதற்குள் மக்களை வரவளைத்தது. நம்பி வந்த மக்கள் மீது எறிகணைகளை வீசி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. கற்பிணித்தாய்மார்கள் பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் நோயாளர்கள் என எந்த வேறுபாடுகளுமின்றி அப்பாவி மக்கள் கொன்றழிக்கப்பட்டனர்.
அனைத்தும் நடந்து முடிந்த பின்னர் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 40000 � 70000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையிட்டுள்ளது. ஆனாலும் 146000 பேருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியாதுள்ளது. தமிழ் மக்கள் மீது புரியப்பட்டது வெறுமனே மனித உரிமை மீறலோ மனிதத்துவத்திற்கு எதிரான குற்றமோ போர்க்குற்றமோ மட்டுமல்ல அது திட்டமிட்ட இனப்படுகொலையாகும். இதற்கு நீதி நிடைக்க வேண்டும். கூட்டுப்படுகொலை மூலம் எமது உறவுகளை கொன்றொழித்தது மட்டுமல்லாமல் தம்மால் கொன்றொழிக்கப்பட்டவர்களை நினைவு கூரவும் கூடாதென சிறீலங்கா அரசும் அதன் இராணுவ
இயந்திரமும் தடைவிதிக்கின்றன. நினைவு கூரலை தடுப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீது தாம் புரிந்த இனவழிப்பை மூடிமறைத்துவிட முடியுமென அரசு எண்ணுகிறது. எம் உறவுகளை அழித்து எமது இனத்தை அடிமைப்படுத்திய நாளை சிறீலங்காவின் தேசிய வெற்றிவிழாவாகவும் கொண்டாடுகின்றது.
இன அழிப்பு ஒன்றின் மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டநாளாகும். அந்நாளை இனவழிப்பு நாளாகவே நாம் பிரகடனம் செய்கின்றோம். கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்;க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான வழியில் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கோருகின்றோம்.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment