|
இன்றோடு ஐந்து ஆண்டுகள்!
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆயிரக்கணக்கான தமிழரின் மரண ஓலங்கள் உலகின் காதுகளில் ஒலித்து ஓய்ந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள்!!
உரிமைக்காக
மூன்று பத்தாண்டுகளாக நடத்திய ஆயுதப் போராட்டமும், அது பெற்றுக் கொடுத்த
அத்தனை நம்பிக்கை கீற்றுகளையும், இழந்து போய் இன்றோடு ஐந்து ஆண்டுகள்!!!
அன்று
எல்லாவற்றையும் இழந்து போய் நின்ற எமக்கு, இந்த ஐந்து ஆண்டுகளில் உலகம்
பெற்றுத் தந்ததென்ன என்ற கேள்வி எம்முன் வியாபித்து நிற்கிறது.
தனியரசு
கோரிப் போராட்டம் நடத்திய தமிழினத்துக்கு - முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்
பின்னர், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளாவது கிட்டியுள்ளதா?
சுயாட்சி,
சமஸ்டி, என்று பேசப்பட்ட தீர்வுகளெல்லாவற்றையும் மறந்து விட்டு, 13வது
திருத்தச் சட்டத்துக்குள் தமிழரைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது இந்தப்
பேரவலம்.
போருக்குப் பிந்திய ஐந்து ஆண்டுகளில் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு கொடுத்துள்ள அதிகபட்ச உரிமை என்றால் அது வடக்கு மாகாணசபை தான்.
13வது
திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள், அவை
உருவாக்கப்பட்ட போது கொண்டிருந்த அதிகாரங்களையும் கூட, இன்று இழந்து போய் -
நிர்வாணமாய் நிற்கிறது.
காணி, காவல்துறை, நிதி அதிகாரங்களேயில்லாத
– வெறுமனே, அவ்வப்போது கூடிக் கலையும் ஒரு சபையையும், பெயரளவுக்கு ஒரு
முதலமைச்சரையும், நான்கு அமைச்சர்களையும் கொண்ட வெற்றுக் கோது தான் இந்த
மாகாணசபை.
இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழருக்குக் கிடைத்துள்ளது வடக்கு மாகாணசபை மட்டும் தான்.
இந்த
மாகாணசபையை வைத்து நிர்வகிக்கவும் முடியாமல், இதனைக் கைவிட்டு ஒதுங்கவும்
முடியாமல் - தமிழர்கள் திரிசங்கு சொர்க்க்க நிலையில் தவிக்க
விடப்பட்டுள்ளனர்.
வடக்கின் பெரும்பான்மையான மக்களின் ஜனநாயக
தீர்ப்பு புறந்தள்ளப்பட்டு - அவர்களின் விருப்பங்களும், அபிலாசைகளும்
சிறிலங்கா ஆட்சியாளர்களால் உதாசீனப்படுத்தப்படும் நிலையே இன்றுள்ளது.
இலங்கைத்
தீவின், நீதித்துறையின் உச்சநிலையை அலங்கரித்தவர்களில் ஒருவரான – இன்றைய
வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே, வெறுத்துப் போகும்
நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
நொண்டி வாத்துப் போன்ற மாகாணசபையை
வைத்து தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் முடக்கி
வைத்துக் கொண்டு – வடக்கிற்கு தனியான மாகாணசபையை உருவாக்கிக்
கொடுத்துள்ளதாகவும், அங்கு ஒரு முதலமைச்சர் ஆட்சி நடத்துவதாகவும்
வெளியுலகிற்குப் படம் காட்டுகிறது சிறிலங்கா அரசு. ஆனால், அந்த முதலமைச்சரால் ஆளுனரை மீறி எதையும் செய்ய முடியாத அவலம் நீடிக்கிறது.
ஒரு
மாகாணசபையை எப்படியெல்லாம் மத்திய அரசு முடக்க முடியுமோ, அந்தளவுக்கு
உச்சபட்ச அதிகாரத்தை வடக்கு மாகாணசபை மீது பிரயோகித்து நிற்கிறது சிறிலங்கா
அரசு. பயங்கரவாத முத்திரை குத்தி - முள்ளிவாய்க்காலில் தமிழரின்
ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு துணை நின்ற உலக நாடுகளெல்லாம்,
ஜனநாயகத்தின் வேர் அடியோடு சாய்க்கப்படுவதைக் கண்டுகொள்ளவில்லை.
வடக்கு,
கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச ஜனநாயக விருப்பங்கள் கூட –
புறக்கணிக்கப்படும் போது உலகம் கண்மூடி நிற்கிறது.
வடக்கு
மாகாணசபைக்குத் தேர்தலை நடத்த நெருக்கடிகள் கொடுத்த நாடுகளும் - அந்த
தேர்தல் நடத்தப்பட்டதைப் பாராட்ட முண்டியடித்த நாடுகளும், தேர்தலுக்குப்
பின்னர், அந்த மாகாணசபை எந்தளவுக்கு சுதந்திரமாகச் செயற்பட முடிகிறது என்று
ஆராய்ந்து பார்த்துள்ளனவா?
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை பயங்கரவாத
முத்திரை குத்திய போது அதற்கு ஆதரவாக ஒன்றிணைந்த உலக சமுதாயம் – வடக்கில்
குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் கூட நசுக்கப்படுவதற்கு, தமது மௌனத்தின் மூலம்
அங்கீகாரம் கொடுத்துள்ளது.
இதற்கு எதிராக எத்தனை நாடுகள் குரல் கொடுத்துள்ளன?
எத்தனை நாடுகள் இது அநீதி என்று தட்டிக் கேட்டுள்ளன - சுட்டிக்காட்டியுள்ளன?
இந்நிலையில் போரின் போதும், ஜனநாயகத்தின் பெயரிலும் வஞ்சிக்கப்படுள்ள தமிழர்கள், வேறு வழியென்று எதைத் தான் நாடுவது?
முப்பதாண்டு
ஆயுதப் போராட்டத்தை, ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் - தமிழர்களை
ஜனநாயகமே தெரியாதவர்களைப் போன்றும் முத்திரை குத்தியவர்களால், அதே
ஜனநாயகத்தின் மூலம் தமிழருக்கான தீர்வை – உரிமையைப் பெற்றுக் கொடுக்க
முடியவில்லை.
குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ள
நிலைக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளது, ஜனநாயகத்தின் பெறுமானத்தையே
கேள்விக்குள்ளாக்கிறது. அதன் மீது தமிழர்கள் கொண்டுள்ள மதிப்பையே கெடுக்கிறது.
இன்று இலங்கைத் தீவின் தெற்கே போர் வெற்றி முரசு ஒலிக்கிறது.
வெற்றிப் பெருமிதக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.
ஆனால், வடக்கில்….?
இந்தப்
போரில் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த - தொலைத்த தமிழர்கள், உயிர்
நீத்தவர்களுக்காக ஒரு கணம் தலைசாய்த்து வணக்கக் கூடிய முடியாத நிலையில்
உள்ளனர். இன்றைய நாளில், ஒரு இரத்ததான நிகழ்வைக் கூட நடத்த முடியாதளவுக்கு அடக்குமுறை தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ளது.
ஆலய வழிபாடுகளையும் கூட மேற்கொள்ள முடியவில்லை.
இதுதான், உலக சமுதாயம் தமிழருக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுக் கொடுத்துள்ள உச்சபட்ச ஜனநாயக உரிமை.
எமக்கான அழவோ - எமக்காக குதூகலிக்கவோ முடியாத – வெறும் சடப்பொருளாய் இருப்பது தான் எம் தலைவிதியா?
குறைந்தபட்ச
ஜனநாயக உரிமைகளைக் கூட, அனுபவிக்க முடியாதவர்களாக மாற்றப்பட்டுள்ள
ஈழத்தமிழினத்துக்கு உலக சமுதாயம் என்ன நியாயத்தை வழங்கப் போகிறது? எப்போது வழங்கப் போகிறது.?
- புதினப்பலகை கடுமத்தினர் 18-05-2014 |
No comments:
Post a Comment