Lebal

Saturday, May 03, 2014

சர்ச்சைக்குரிய மேதின உரை குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம்!


  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேதின உரையின்போது தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் தனது மேதின உரையில், 'இராணுவத்தை ஒருபோதும் வட மாகாணத்திலிருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். ஒருகாலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்படியான சவாலான கருத்துக்களை அவர் ஏன் முன்மொழிகின்றார் என்று எண்ணி அவர் மீது பரிதாபப்பட்டேன்' என்று கூறியிருந்தார்.

   அதுபற்றி எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அதுபற்றிய விளக்க அறிக்கை ஒன்றை முதலமைச்சர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.
'அலெக்ஷாண்டர் ஒரு மகாவீரன். அதற்காக அவன் அதிகாரங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது. பிரபாகரன் ஒரு மகா வீரன் என்று சரத் பொன்சேகா கூட அண்மையில் கூறியிருந்தார். அதற்காக அவர் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது' என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன். 'ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 18-வது திருத்தச் சட்டத்தின் பின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசமே வைத்திருக்கின்றார். இன்று கேட்பாரின்றி அதிகாரத்தில் இருக்கின்றார். இவை எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி ஜனாதிபதி சிந்திக்க வேண்டும் என்றே மேற்கண்டவாறு கூறினேன்' என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர்.
'தங்கை அனந்தி அவர்கள் நான் கூறியதன் அர்த்தம் புரியவில்லை என்றும் ஆனால் முதலமைச்சர் காரணமில்லாமல் எதுவும் கூறியிருக்க மாட்டார் என்றும் கூறியதாக அறிந்தேன். அப்படிக் கூறியிருந்தால் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 'நான் பேச்சு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வந்தபோது எவருமே என்னை அண்டி எதுவும் கேட்கவில்லை, கேட்க எத்தனிக்கவும் இல்லை. எல்லோரும் வழக்கம் போல் கைகூப்பி வணக்கம் தெரிவித்தே என்னை வழியனுப்பினார்கள்' என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment