Wednesday, May 07, 2014

கிணறு வெட்டுவோம்

இப்போதெல்லாம் மூன்று கிலோமீட்டர் பயணிப்பதற்குள் நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான்.
ஆழ்குழாய் கிணறு என்ற பெயரில் பூமித்தாயின் உடல் முழுவதும் துளை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சேமிப்பதைவிட சேமித்ததை பாதுகாப்பது மிக முக்கியம்.
நகரங்களில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அதிகரிக்கின்றன என்பதில்லை. கிராமங்களிலும் அதன் ஆக்டோபஸ் கரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதற்கு அண்மைக்கால உதாரணம் தேனி மாவட்டம்.

வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிக முக்கியமானது வருசநாடு மலைப்பகுதி. இங்குதான் மூல வைகையாறு உள்ளது. மூல வைகைக்கு கோடாலியூத்து போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுசிறு நீரூற்றுகள் மூலம் தண்ணீர் வரும். அந்தப் பகுதி முழுவதும் மலைப்பகுதி. அங்கு விவசாயம்தான் முக்கியத் தொழில்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில் இந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1,600 விவசாயக் கிணறுகள் இருந்துள்ளன.
சமீபத்திய கணக்கெடுப்பில் வெறும் 413 விவசாயக் கிணறுகள்தான் உள்ளன. பெரிய அளவில் காங்கிரீட் கட்டிடங்கள் உருவாகாத, இன்றும் பசுமை கோலோச்சும் பகுதிகளில் இதுவும் ஒன்று. விவசாயமும் ஓரளவுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்கையில், கிணறுகளின் எண்ணிக்கை எப்படி குறையும்?
கிணறுகள்தான் குறைந்துள்ளனவே தவிர, ஆழ்குழாய் கிணறுகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இப்போதைய கணக்கெடுப்பில் ஐந்து ஏக்கர் நிலத்தில் நான்கு முதல் ஆறு ஆழ்குழாய் கிணறு வரை உள்ளதை கண்டறிந்துள்ளனர். அப்படியென்றால், அந்த மலைப் பகுதி முழுவதும் எத்தனை ஆழ்குழாய் கிணறுகள் இருக்கும்?
இன்றைய நவீன யுகத்தில் ஆழ்குழாய் கிணறுகள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் கிணறுகள் குறைவதுதான் கவலைப்பட வேண்டிய விஷயம். கிணறுக்கும் ஆழ்குழாய் கிணறுகளுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம், மழைநீர் சேமிப்புதான். மழை பெய்யும் போது தண்ணீர் கிணறுகளை அடையும். கிணறுகளில் நீர்மட்டம் உயரும்போது அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாகத்தான் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தை நோக்கி போய் விட்டிருக்கிறது. இதற்கு ஆழ்குழாய் கிணறுகளே காரணம் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
ஆழ்துளைக் கிணறுகள் மழைநீரைச் சேமிப்பதில்லை. அப்படியே தண்ணீர் வந்தாலும் அதன் 8 இன்ச் விட்டத்தில் எவ்வளவு தண்ணீரை தேக்கிவிட முடியும். விளைவு? பெய்யும் மழைநீர் முழுவதும் வீணாக வெளியேறி சாக்கடைகளிலும், ரோடுகளிலும் சங்கமிக்கிறது. இல்லையேல் வெள்ளமாக வெளியேறி கடலுக்குள் சென்றுவிடுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது என்று எல்லாரும் புலம்புகிறோமே தவிர, அதற்கு முக்கிய காரணம் என்ன என்று யோசிப்பதில்லை. வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரித்தாலும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் அதனால் பயன் கிடைக்கும். அதற்கு பதில் வீட்டுக்கு வீடு கிணறு தோண்டி அதில் மழைநீர் சென்றடையும்படி செய்தால், மிகப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்.
இதை நிறைவேற்ற வேண்டுமானால் அரசு சில விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். பெரிய கட்டுமானங்களில் போர்வெல்களுக்குப் பதில், கிணறுகளை வெட்ட உத்தரவிட வேண்டும். சிறிய அளவில் வீடு கட்டுவோருக்கு கிணறு வெட்டுவது பெரிய செலவாக இருக்கலாம். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இது சாதாரண விஷயம்.
ஐந்து இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு பதில் 15 அடி விட்டத்தில் ஒரே இடத்தில் கிணறு வெட்டலாம். குடியிருப்பில் பெய்யும் மழைநீர் முழுவதும் கிணற்றை அடையும் விதத்தில் செய்ய வேண்டும். ஆனால், இப்போதைய நிலையில் 300 அடி தோண்டினாலும் கிணற்றில் தண்ணீர் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்வி.
நகரங்களில் தண்ணீர் விற்பனை இப்போது மிகப் பெரிய வணிகமாக மாறிவிட்டது. டேங்கர் லாரிகள், டேங்கர் டிராக்டர்கள் போவதும் வருவதுமாக உள்ளன. அவற்றிற்கு தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? விவசாயக் கிணறுகளிலிருந்துதான்.
நகரில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்துதான் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அங்கு இவ்வளவு இறைத்த பிறகும் தண்ணீர் இருக்கத்தானே செய்கிறது. அகலமான கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கிணறு வெட்டுவது செலவு பிடிக்கும் வேலை எனலாம். அந்தக் காலத்தில் வெறும் மனித சக்தியை வைத்தே கிணறு வெட்டியுள்ளனர். இன்றைய நவீன உலகில் இயந்திரங்கள் உதவியுடன் கிணறு வெட்டுவது ஒன்றும் பெரிய காரியமில்லையே.
First Published : 05 May 2014 01:35 AM IST
source:dinamani

No comments:

Post a Comment