Saturday, May 10, 2014

ஐ.நா விசாரணை அறிக்கையை ஜப்பான் நிராகரிக்கும்? – சிறிலங்கா அதிபரிடம் வாக்குறுதி.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு உதவியாக அமையாது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானிய வெளிவிவகார உதவி அமைச்சர் செய்ஜி கிஹாரா (Seiji Kihara) நேற்றுமாலை அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் சிறிலங்காவுக்கு உதவியாக அமையுமா என்று ஆலோசனை நடத்தினோம்.


அது சிறிலங்காவுக்கு உதவியாக இருக்காது என்று முடிவு செய்தோம்.

அதனால் தான், வாக்கெடுப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்தோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர், தயவு செய்து இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக் கூறுங்கள் என்று ஜப்பானிய உதவி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியவர்களால் முன்வைக்கப்பட்ட, அனைத்துலக விசாரணை தவிர்ந்த, ஏனைய எல்லா கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய உதவி அமைச்சர் கிஹாரா, அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்குத் தமது நாடு தொடர்ந்தும் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

“அனைத்துலக அமைப்புகளால், தயாரிக்கப்படும் பக்கச்சார்பான அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை.

சிறிலங்கா தனது பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஜப்பான் நம்புகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.source:pp


No comments:

Post a Comment