Thursday, May 22, 2014

பதவியேற்பு அன்று டில்லியில் கருப்புக்கொடி காட்ட வைகோ தயாராகிறார் ?


இந்தியாவின், 15வது பிரதமராக, பா.ஜ.,வின் நரேந்திர மோடி, வரும் திங்கள் கிழமை பொறுப்பேற்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே உறுதி தெரிவித்துஉள்ளதால், இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம் காட்டி, பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான, ம.தி.மு.க.,வின் வைகோ, பா.ம.க.,வின் அன்புமணி ஆகியோர் அந்தநிகழ்ச்சியில் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டில்லி, பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், லோக்சபா, பா.ஜ., கட்சித் தலைவராக, ஒருமனதாக மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரை பிரதமராக அங்கீகரித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடிதம் வழங்கியுள்ளார்.



“இந்த தேர்தலில் பா.ஜ.க. பெரு வெற்றிபெற உதவிய கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.-விடம், பதவியேற்பு விழாவுக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என ஆலோசனை நடத்தாமல், டில்லியில் உள்ளவர்கள் எப்படி ராஜபக்ஷேவை அழைக்கும் முடிவை எடுக்கலாம்” என ஆவேச கேள்விக்கணை தொடுத்தார், ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர். “கடந்த தடவை ராஜபக்ஷே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்தபோது சாஞ்சிக்கே போய், ராஜபக்ஷேவுக்கு எதிராக கொடிபிடித்த தீரர் வைகோ மட்டுமே. சாஞ்சிக்கு வந்த ராஜபக்ஷேவையே கதிகலங்க வைத்த வைகோ, ராஜபக்ஷே தலைநகரில் கால் வைப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்து விடுவாரா? டில்லி விமான நிலையத்திலேயே மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்றும் தெரிவித்தார் அந்த ம.தி.மு.க. பிரமுகர்.

மத்திய பிரதேசத்துக்கு ராஜபக்ஷேவை அழைத்ததுகூட, அங்குள்ள பா.ஜ.க. மாநில அரசுதான் என்பது பலருக்கு தெரியாது. எது எவ்வாறு இருப்பினும், என்ன நடக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மதிமுக தலைவர் உணர்வாளர் வைகோ அவர்கள், ராஜபக்ஷ டெல்லி வந்தால் நிச்சயம், இதில் பங்கேற்க மாட்டார் என்று , அவரது கட்சி முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment