Lebal

Wednesday, May 07, 2014

இலங்கையில் ஆயுதக்குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா

இலங்கையில் ஆயுதக்குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் கூட ஈழத்தமிழருக்கு காத்திரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்று பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கத்தின் பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ஈழத்தமிழருக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியைத் துணைத்தூதுவர் மகாலிங்கம் மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும்.

எமது பிராந்தியத்தில் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி, அந்தக் குழுக்களை மோதவிட்டு, எமது இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்கு இந்தியா துணை போயிருந்தது.


ஒரு குழுவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் பரவாயில்லை.

ஆனால் இந்தியா எல்லா ஆயுதக்குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியிருந்தது.

இதனால் குழு மோதல்கள் இடம்பெற்றன. இதன் பின்னணியில் இந்தியா இருந்தது.

குழுக்களை மோதவிட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா, தமிழரின் ஆயுதப் போராட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்மக்கள் படும் துன்பங்கள், நிர்க்கதி நிலைக்கு இந்தியா தான் காரணம்.

இந்திய அணுகுமுறையினால் ஏற்பட்ட அழிவுகளால் தான் தமிழர்களுக்கு இந்நிலை ஏற்பட்டது.

எனவே இந்திய மத்திய அரசிடம் தமிழரின் ஆதங்கத்தை எடுத்துக் கூறுங்கள்.

ஈழத்திலுள்ள தமிழர்கள் இந்திய நாட்டைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை மத்திய அரசிடம் கூறவேண்டும்.

இறுதிப் போரில் தமிழ்மக்களை இந்தியா நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்.

போராட்டத்தையும் நிறுத்தியிருக்க முடியும்.

இறுதிப்போரில் தமிழ் மக்கள் இழக்க முடியாதவற்றை எல்லாம் இழந்து விட்டனர்.

அவ்வாறு மக்கள் அனைத்தையும் இழந்த பிற்பாடும் கூடக் காத்திரமான நடவடிக்கையை இந்தியா இதுவரை எடுக்கவில்லை.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பும் இந்தியா பின்வாங்குவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்தியாவை நாம் நம்புகின்றோம். ஆனால் இந்தியா தமிழர்களை ஏமாற்றி விட்டது.

ஈழத்தமிழரின் பிரச்சினை ஜெனிவா வரை சென்றுள்ள நிலையில் இந்தியா நடந்து கொள்ளும் விதம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்று அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

வழிமூலம்  - உதயன்


No comments:

Post a Comment