Lebal

Wednesday, April 29, 2015

தமிழ் மொழியின் எழுத்தமைதி

தொல்காப்பியர் அகர முதல னகரம் இறுவாய் எழுத்துகள் முப்பது என்றும் (உயிர் - 12, புள்ளியிட்டு எழுதப்படும் மெய் -18), இவைதவிர, சார்ந்து வரும் புள்ளியிட்டு எழுதப்படும் ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய மூன்று சார்பு எழுத்துகளையும் கூறியுள்ளார். சார்பெழுத்துகளுக்குப் புள்ளியிட்டு எழுதும் பழக்கம் 12-ஆம் நுற்றாண்டுக்கு முன்பே நின்றுவிட்டது. ஆக 31 எழுத்துகளே இன்று தமிழ் எழுத்துகள் ஆகின்றன.
மெய் எழுத்துகளோடு உயிர் எழுத்துகள் கூடிவரும் என்று தொல்காப்பியர் கூறினாலும் 216 உயிர்மெய் எழுத்துகள் வரும் எனத் தொகை கூறவில்லை. 194 உயிர்மெய் எழுத்துகளே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆயினும், அவற்றை எழுத 102 குறியீட்டெழுத்தே பயன்பாட்டில் இருந்தன. இப்பொழுது 63 வடிவங்களே உயிர்மெய் வடிவ எழுத்தாக வருகின்றன. 63+31 = 94 குறியீடுகள் எழுதப்பயன்படுகின்றன. கு, கூ வரிசைகளுக்குத் தனி உயிர் குறியீடு கொடுக்கும் போது 29+31=60 வடிவங்களே தமிழுக்கு வரும்.
நமக்குத் தெரியவரும் எல்லா மொழிச் சொற்களையும் வழக்கில் இருக்கும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுத முடியும். தமிழ் எழுத்துகளின் இயல்பு, சொற்களின் அமைப்பு, தொடர் அமைப்பு, மொழியின் உயிர்நிலை புரியாதவரே ஜ ஷ ஸ ஹ க்ஷ என்னும் கிரந்த எழுத்துகளை ஏற்க விரும்புகிறார்கள்.

தமிழ் மொழியின் ஆய்த எழுத்தின் பயன்பாடு அவர்களுக்குத் தெரியாது போலும்! Coffee என்னும் ஆங்கிலச் சொல்லைக் காஃபி என்று எழுதிவரும் வழக்கத்தைக்கூட பார்க்கவில்லை போலும்! தொல்காப்பியர் ஆய்த எழுத்தின் ஓசையை நலிபுவண்ணம் என்றும் (வல்லின மெய்யை நலியச் செய்யும் ஒலியன் என்றும்), அதன் இயல்பை உள்ளதன் நுணுக்கம் என்றும் கூறுகிறார்.
20-ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலேயே ஒலி அலையின் இயல்பைப் புரிந்துகொண்ட மாணிக்கவேல் எனும் பொறியாளர், ஆய்த எழுத்தின் பயன்பாட்டை விளக்கிக் கூறியுள்ளார். எஃகு, கஃசு, கஃபு, அஃது போன்ற சொற்கள் எஹ்ஹு (எஹு), கஷ்ஷு (கஷு), kaffu, Attu என ஒலிக்கும் என்பதைத் தொல்காப்பியரே உணர்த்துகிறார். எனவே, முஹமது- முஃகமது/ முகமது, விஷால் - விஃசால் / விசால், தனுஷ் - தனுஃசு / தனுசு என விரும்பியபடி எழுதலாம். எனவே ஹ, ஷ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையே இல்லை. மலையாள மொழியில் ஷ என்னும் கிரந்த எழுத்து இருந்தும், மேஷம், ரிஷபம் என்னும் பெயர்களை மேடம், இடபம் என்று எழுதுதலையும் பேசுதலையும் கவனிப்பார்களாக.
"க்ஷ' என்பது கூட்டொலி, பக்ஷி - பட்சி, பக்கி, தக்ஷணம் - தட்சணம், தக்கணம், மோக்ஷம் - மோட்சம் என்று எழுதி வருகிறோம். அதுவே போதுமானது. விஜயன் - விசயன், ஜானகி - சானகி என்று எழுதி வருகிறோம். அதுபோதுமானதே ஆகும். ஸரஸ்வதியை "சரசுவதி' என்றும், மஹேஸ்வரியை - "மகேசுவரி' என்றும் பண்டு தொட்டே எழுதி வருகிறோம். எனவே, ஸகரத்துக்கும் தனி எழுத்துத் தேவையில்லை. ஸ்தோர், ஸ்டாலின் என மொழி முதலில் "ஸ்' வரும்போதுதான் அவ்வெழுத்துத் தேவையா? என்று தோன்றுகிறது. தமிழில் மெய்யெழுத்து மொழி முதலில் வராது. எனவே, பொருத்தமான முன்னுயிர் கொடுத்தே எழுத வேண்டும். இசுதோர், இசுடாலின் என்று எழுத வேண்டும்.
இந்தியில் ழ, எ, ஒ எழுத்துகள் இல்லை. தமிழன், கென்னடி, கொடி போன்ற சொற்களைத் தமிளன், தமிலன், கேன்னடி, கோடி என்றுதான் எழுத முடியும். ஆங்கில மொழியில் பலருடைய பெயரை எழுத முடியவில்லையே!
"மிக்ஏல்' என்னும் எபரேயப் பெயரை Micheal என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள், "மைக்கல்' என்று படிக்கிறார்கள்; ருசியர்கள் "மிகாயல்' என்கிறார்கள்; ஆசுதிரேலியர் "மிசாயல்' என்கிறார்கள். பல சிக்கல் ஆங்கில மொழியில் இருந்தாலும் அவர்கள் புதிய எழுத்துகளை உருவாக்கவோ எழுத்தொலியை முறைமைப்படுத்தவோ இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒருநிலை இருக்கிறது. அந்நிலைக்கு ஏற்பவே அம்மொழிகள் வழக்கிலிருக்கும்.
இன்று ஆங்கிலத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் புதிய புதிய சொற்கள் தமிழ் வழக்கில் வந்து கொண்டிருக்கும்போது, புதிய பிறமொழி எழுத்துகளையும் பயன்படுத்தினால் தமிழ் மொழிக்கட்டுச் சிதைந்து புதிய மொழியாகிவிடும்.
source:denamani
First Published : 26 April 2015 02:38 AM IST

No comments:

Post a Comment