Wednesday, August 28, 2013

Col Raju, A Tiger Commander's Contribution To the Cause.

Dear Friends,
This tube on Col. Raju is taken from the article below. Col.Raju is one of the senior commanders of the LTTE. Please view the tube and, those who can read Tamil, read the article below.


Visvanathan

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்......


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.

நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.

அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.

இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.

ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.

பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.

சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.

அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.

அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.

ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன்

அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.

அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.

படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

http://www.youtube.com/watch?v=qAaaIQ4jpmU

No comments:

Post a Comment