அதிபர் தரம் ஒன்று என்ற தரத்துடன்
இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்தில் கடமையாற்றிக்
கொண்டிருக்கும் திருமதி நவமணி சந்திரசேகரம், தம்மை உடுப்பிட்டி மகளிர்
கல்லூரியின் அதிபராக நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர்
ஜி.எ.சந்திரசிறியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபர்
நியமனத்திற்காக ஒரு வருடத்திற்கு முன்பே விண்ணப்பித்த நவமணி சந்திரகேசரம்,
2004 ஆம் ஆண்டு அதிபர் தரம் ஒன்றை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு அதிபர் தர நேர்முக
பரீட்சைக்கு வடமராட்சி கல்வி வலயத்தினால் தாம் அழைக்கப்படவில்லை என்று
நவமணி சந்திரகேசரம் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு 1 வருடமும் 7 மாதமும்
உள்ள ஒருவரை ஒரு பாடசாலையின் அதிபராக நியமிக்க முடியாதென கல்வியமைச்சின்
வடமாகாண செயலாளர் சத்தியசீலன் தெரிவித்து வந்தார்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு நவமணி
சந்திரகேசரம் நியமிக்கப்படாமைக்கு சாதியப் பிரச்சினையே காரணம் என ஒரு குழு,
நவமணி சந்திரகேசரத்திற்கு ஆதரவாக ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு
வந்ததையடுத்து, வடமாகாண ஆளுனர் உடனடியாக நவமணி சந்திரகேசரத்திற்கு மாற்றம்
வழங்கும்படி கல்வியமைச்சின் வடமாகாண செயலாளர் சத்தியசீலனுக்கு
உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நவமணி சந்திரகேசரத்திற்கு ஆதரவாக
குரல்கொடுத்த குறித்த குழுவிற்கு முன்னதாகவே ஆளுனர் சந்திரசிறி இராணுவப்
பாணியில் இவ்வாறான உத்தரவையிட்டதாக பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் உடுப்பிட்டி மகளிர்
கல்லூரியின் அதிபராக திருமதி கௌரி சேதுராஜா நேற்றுமுன்தினம்
உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment