Lebal

Monday, March 10, 2014

அனைத்துலக சமூகத்தின் எந்தவொரு அழுத்தத்திலிருந்தும் சிறிலங்காவை சீனா காப்பாற்றும்

"சீனா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சிறிலங்காவுக்கு மிகவும் பலமான ஆதரவை வழங்கும் நாடாகும். சீனா சிறிலங்காவுக்கு தனது ஆதரவை வழங்குவதன் மூலம் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது"

இவ்வாறு Bloomberg News இணையத்தளத்தில் Anusha Ondaatjie எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.


சீனாவுடனான சிறிலங்காவின் ஆழமான பொருளாதார உறவானது, இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்வேண்டும் என்கின்ற நோக்குடன் முன்வைக்கப்படும் எந்தவொரு அழுத்தத்திலிருந்தும், சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்ளும்.

இவ்வாரம் இடம்பெறுகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவால் இழைக்கப்பட்ட கடந்த கால மீறல்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் போன்றன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலர் சாறா சேவல் Sarah Sewall குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா தனக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருவதுடன் கடந்த மாதம் சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர் ஜி.;எல்.பீரிஸ் சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு சீனா ஆதரவு வழங்கும் என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.

"சீனா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சிறிலங்காவுக்கு மிகவும் பலமான ஆதரவை வழங்கும் நாடாகும். சீனா சிறிலங்காவுக்கு தனது ஆதரவை வழங்குவதன் மூலம் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது" என சிறிலங்காத் தீவின் மிகப் பெரிய தனியார் நிதி நிறுவனமான NDB அவிவா நிதி முகாமைத்துவ நிறுவனத்தின் ஆய்வாளரான பிமானி மீப்பாகல Bimanee Meepagala தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சனத்தைப் பெறுகின்றதோ அல்லது இல்லையோ, அதனைக் கூடக் கருத்திலெடுக்காது சீனா தனது முதலீடுகளை மேற்கொள்கின்றது எனில், சீனா பூகோள ரீதியில் செல்வாக்கையும் வளங்களையும் கொண்டுள்ளதுடன் அதன் இராஜதந்திரம் உலகம் பூராவும் பரவிவருகிறது என்பதையே குறிக்கிறது.

கடந்த ஆண்டு சீன அதிபர் பதவியேற்றதன் பின்னர் தென்னமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன், நிதி சார் உதவிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார். சீனா, சிறிலங்காவுடன் 'அனைத்து வகையான பங்காளியாகவும்' இருப்பதாக கடந்த மாதம் சீனாவுக்கு பீரிஸ் பயணம் செய்திருந்தபோது குறிப்பிட்டிருந்தார்.

"இலங்கையர்கள் தமது உள்ளகப் பிரச்சினைகளைத் தாமே சமாளிக்கக் கூடிய அறிவையும் ஆற்றலையும் கொண்டுள்ளனர் என நாம் நம்புகிறோம். மனித உரிமை விவகாரம் என்ற பெயரில் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதை சிறிலங்காவில் வாழும் மக்கள் எதிர்த்து நிற்கின்ற தகைமையைக் கொண்டுள்ளனர். மனித உரிமை விவகாரங்களை அரசியல் மயப்படுத்துவதையும் அது தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெப்ரவரி 12 அன்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

40,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிவித்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்திலிருந்து சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா மாறியுள்ளது. இந்த விடயத்தில் சீனா, அமெரிக்காவை மிஞ்சியுள்ளது. 2012ல் சீனா, சிறிலங்காவின் மொத்த வர்த்தகத்தில் 9.6 சதவீத இடத்தைத் தனதாக்கியுள்ளது. இந்த சதவீதம் 2008ல் 5.2 ஆகக் காணப்பட்டது என மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் வர்த்தகப் பங்களிப்பானது 9.7 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2012ல் சிறிலங்காவுக்கு சீனா 490 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளதாகவும், மேற்குலக நாடுகள் மற்றும் நிதி வழங்கும் அமைப்புக்கள் 2012ல் 211 மில்லியன் டொலர்களை மட்டுமே வழங்கியதாகவும் சிறிலங்காவின் வெளியக வளத் திணைக்களத்தின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை, அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் போன்றன உட்பட பல்வேறு பாரிய திட்டங்களை சீனா தனது நிதியில் அமுல்படுத்தியுள்ளது.

சிறிலங்கா தனக்கெதிராக மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் அழுத்தத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சீனா மற்றும் ரஸ்யாவின் ஆதரவுகளைப் பெற்றுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். 'சிறிலங்கா மீது எந்த நாடுகள் விரும்பினாலும் தடைகளைப் போடட்டும்' என மகிந்த ராஜபக்ச செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் சிறிலங்கா மீது தடைகளைப் போடுவதற்கு அமெரிக்கா எவ்விதத்திலும் தயக்கம் காண்பிக்காது என பெப்ரவரி 01 அன்று சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிசா தேசாய் பிஸ்வால் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கருத்திற் கொண்டு 2010ல் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் இறக்குமதி வரிச்சலுகையை மீளப்பெற்றது.
இவ்வாறான பல்வேறு அழுத்தங்கள் சிறிலங்கா மீது போடப்பட்ட போதிலும் தான் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் இது தொடர்பில் பொறுப்புக் கூறப்போவதில்லை எனவும் சிறிலங்கா அறிவித்தது. தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதானது நாட்டை மேலும் சீரழிவுக்கு உட்படுத்தும் எனவும் சிறிலங்கா அறிவித்தது.

"இவ்வாறான பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது நாட்டில் 30 ஆண்டுகாலம் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் பல்வேறு முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளது" என ஜி.எல்.பீரிஸ் ஐ.நா வில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சிறிலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் இறைமைப் பத்திரங்களைக் கொண்டுள்ள போதிலும், சீனா, சிறிலங்காவுக்கு மிக அதிக பொருளாதார நலன்களை வழங்குகின்ற வழங்குகின்ற நாடாக உள்ளதாக கொழும்பிலுள்ள கொள்கைக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் பிரதி இயக்குனர் டுஸ்னி வீரக்கோன் தெரிவித்துள்ளார். பூகோள பெண்கள் விவகாரத்திற்கான அமெரிக்கத் தூதர் கத்தறின் றுஸ்சேல் சிறிலங்காவுக்குப் பயணிப்பதற்கான அனுமதியை கடந்த மாதம் சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்ததாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்தது.

"சிறிலங்காவுக்கு சீனா மிக அதிகளவில் கடன்கள் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு, சிறிலங்காவின் வர்த்தகம், சுற்றுலாத்துறை விரிவாக்கத்திற்கான முதலீடுகளை மேற்கொள்கிறது. இது சிறிலங்கா சிறந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. அமெரிக்கா, சிறிலங்காவுக்கான அபிவிருத்தி சார் திட்டங்களை வழங்காது சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முற்பட்டாலும் இது முக்கியமானதல்ல" என வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment