Lebal

Friday, March 28, 2014

அதிருப்தியாளர்களை அழிப்பதை விட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்! – இலங்கை அரசைக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச்சபை.

News Serviceஇலங்கை அரசு தனது அதிருப்தியாளர்களை தேசிய மட்டத்தில் தேடி அழிப்பதை விடுத்து, ஐ.நா. புலன் விசாரணையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியிருக்கின்றது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மன்னிப்புச் சபை இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. "இலங்கையில் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஐ.நா. தீர்மானத்துக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கின்றது." - இப்படிக் கூறியிருக்கின்றார் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய - பசுபிக் பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிறிபித்ஸ்.

   "நாட்டில் மிக மோசமான சிவில் பிணக்கின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து சுயாதீன, பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தும்படி ஐ.நா. ஏற்கனவே இரண்டு தடவைகள் விடுத்த கோரிக்கைகளை இலங்கை உதாசீனம் செய்து விட்டது. இப்போது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதன் மூலம் சர்வதேச நம்பகத்தன்மையை மீளப் பெறுவதற்கு இலங்கைக்குப் புதிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது." என்றார் அவர். "தண்டனை விலக்களிப்பு விவகாரம் சரியாகக் கையாளப்பட்டு உண்மைகள் நிரூபிக்கப்படும் விதத்தில் உயர்ந்த தரத்திலும் சிறப்பாகவும் புலனாய்வு மற்றும் விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்னெடுக்கக் கூடியதாக அவருக்கு வளமும், அரசியல் ஆதரவும் வழங்கப்படுவது முக்கியம்".
"இலங்கை அதிகார வர்க்கத்தினர், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் மட்டும் தவறிவிடவில்லை, அதற்கு நீதி கேட்பவர்களை இலக்கு வைப்பதிலும் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்." "இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டும் விதத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்காக தங்களின் உயிரையும் சுதந்திரத்தையும் பணயம் வைத்து செயற்பட்ட - மனித உரிமைகளைப் பேணுவதற்காகப் போராடி வருபவர்களுக்கும் - இந்தத் தீர்மானம் மிக முக்கியமானதாகும்." "அது போன்றே நீதிக்காக காத்திருந்தவர்களான பாதிப்புற்றோருக்கும் அவர்களது குடும்பத்தார்களுக்கும் இத்தீர்மானம் அதேயளவு முக்கியமானது" - என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment