புதுடெல்லி, ஏப்.29-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் சொத்துவிவரம், குற்ற விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். நரேந்திரமோடி தனது திருமணம் பற்றிய தகவலை கடந்த காலங்களில் மறைத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் கமிஷனை அணுகியது.
அதேபோல காங்கிரஸ் வேட்பாளரான மத்திய மந்திரி கபில்சிபல் தனது மனைவியின் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மறைத்துவிட்டார் என்று பா.ஜனதா முன்னணி தலைவர் சுப்பிரமணியசாமி தேர்தல் கமிஷனிடம் புகார் செய்திருந்தார்.
வேட்பாளர்கள் உண்மையை மறைத்து தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தால், இதனால் வேதனை அடையும் நபர்கள் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.
இப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மக்கள் நேரடியாக உரிய கோர்ட்டுகளை அணுகலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் ஒரு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
பல்வேறு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மற்றும் குற்றங்கள் பற்றிய உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை பிரமாண பத்திரத்தில் அளித்துள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் வந்ததன் காரணமாக தேர்தல் கமிஷன் இந்த சுற்றறிக்கையை அனுப்பியது.
கமிஷனுக்கு வந்த பெரும்பாலான புகார்களை தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியோ, வேட்பாளரை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரும்படியோ, அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படியோ தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது.
தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் அளிக்கும் மனுவில் தவறான தகவல்கள் இருந்தால் அந்த தேர்தல் அதிகாரிகள் கோர்ட்டை அணுகலாம் என்று 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரமாண பத்திரம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125ஏ பிரிவின்படி தவறான பிரமாண பத்திரம் அளித்தாலோ அல்லது தகவல்களை மறைத்தாலோ யார் வேண்டுமானாலும் கோர்ட்டை நேரடியாக அணுகலாம். 2012 திருத்தத்துக்கு பின்னர், பிரிவு 125ஏ-வின் கீழ் தொகுதி தேர்தல் அதிகாரியை புகார் செய்யும்படி நிர்ப்பந்திக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment