Lebal

Monday, April 28, 2014

சிறிலங்காவில் போரிட்டவர் இந்திய இராணுவத் தளபதியாவதில் சர்ச்சை

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கெடுத்த லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக இந்த வாரம் நியமிக்கப்படவுள்ளார்.

இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக் நியமிக்கப்படுவதற்கு பாஜகவைச் சேர்ந்தவரும், முன்னாள் இந்திய இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக்கை அடுத்த இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கு, நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு, பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து, ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு விரைவில் அவரை அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கவுள்ளது.


இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது, புதிய அரசு பதவியேற்க ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியை நியமிக்கும் கொள்கை முடிவை இந்த அரசினால் எடுக்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது.

அத்துடன், புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ள லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், ஒழுக்காற்று விதிகளின் கீழ் ஏற்கனவே பதவிஉயர்வு பெறுவதற்குத் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் விகே சிங்கினால் தடைவிதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் புதிய இராணுவத் தளபதி நியமனத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், சிறிலங்காவில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில், கொம்பனி தளபதியாக பங்கேற்றவர்.

சிறிலங்காவிலும், காஷ்மீரிலும், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment