தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரங்கள் மீது
பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்வதற்கான சதித்திட்டங்களைத் தீட்டியவர்
என்கின்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள
இலங்கையர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா
மிகவிரைவில் மலேசியாவை நாடவுள்ளது. சென்னை மற்றும் பங்களுரில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் மலேசியா, இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. இதன்அடிப்படையில் இலங்கையர் ஒருவர் கடந்த புதனன்று மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.
இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தற்போது கைதுசெய்யப்பட்ட இலங்கையரை கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மலேசிய சிறப்புப் பிரிவு கண்காணித்து வந்ததாக, தற்போது இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் பிரதி காவற்துறை பொறுப்பதிகாரி பகிர் சினின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த சகிர் குசேன் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்நாட்டு காவற்துறையினர் இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் பங்களுரில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தையும் வேவுபார்க்குமாறு தன்னிடம் சிறிலங்காவிலுள்ள பாகிஸ்தானிய உயர் ஆணையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னிடம் கேட்டதாகவும் இதனால் தான் இந்தப் பணியில் ஈடுபட்டதாகவும் குசேன் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment