நிலையான அமைதியையும், சிறிலங்காவின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கு
நீண்டகால அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு, சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரும்
தீர்மானம், ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில்
முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ருஸ் கோல்ட் சமர்ப்பித்துள்ள இந்த 587வது இலக்கத் தீர்மானத்துக்கு, குடியரசுக் கட்சியின் பில் ஜோன்சனும், ஜனநாயக கட்சியின் ரியேனியும் இணை அனுசரணையாக கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த தீர்மானம், கடந்த 19ம் நாள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னர், சிறிலங்காவில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுக்கும் நன்மையளிக்கும் வகையில், உள்நாட்டு மீள்கட்டுமானம். மீள்குடியமர்வு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு இந்த தீர்மானம் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த கடந்தகால உறவுகளை ஒப்புக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லிணக்கத்துக்கான உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்துமாறும் இது கோரியுள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பான வழக்கமான கவலைகளை வெளியிட்டுள்ள இந்த தீர்மானம், சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களாக அடையாளம் காணப்படும் எவரையும், அமெரிக்காவுக்குள் நுழைய இராஜாங்கத் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.
அனைத்துலக முகவர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரும் இந்த தீர்மானத்தில், அவை நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதுடன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் படியும் கோரப்பட்டுள்ளது.
நாடெங்கும் படைக்குறைப்பை மேற்கொள்ளவும், சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவத்தை அகற்றவும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் இதில் கோரப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியின் மற்றொரு உறுப்பினரான லான்ஸ் லியனாட் நேற்றுமுன்தினம் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளார்.
இந்த தீர்மானம் தற்போது வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment