சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, புதுடெல்லியில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தலைமையில் இந்தப் போராட்டம் புதுடெல்லியில் உள்ள ஜன்தர் மந்தரில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ளார்.
வரும் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 11 மணியளவில், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான இந்தப் போராட்டம் நடத்தப்பட்வுள்ளது.
அதேவேளை, இந்தப் போராட்டம், நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு எதிரானது என்ற தோற்றம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள மதிமுக முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ளதற்கு, எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், நரேந்திர மோடிக்கு எதிரான பரப்புரையாக தாம் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சிறிலங்கா அதிபரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment