மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ராஜபக்சே வருகையை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ இன்று டெல்லியில் 100 கட்சித் தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார்.
பதவியேற்பு விழாவையொட்டி ஏற்கனவே டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், தடையுத்தரவை மீறி மதிமுக தலைவர் வைகோ இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாராளுமன்ற வீதியின் பின்புறத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், அந்நாட்டு கொடியை தீவைத்து கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்படும் போது வைகோ செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜபக்சேவின் வருகை இந்தியாவின் புனிதத்தன்மையை மாசுபடுத்திவிடும். ராஜபக்சே ஒரு இனப்படுகொலையை நடத்திவிட்டு இங்கு வந்துள்ளார்.
நாங்கள் எங்கள் அண்ணன் தம்பிகளை இழந்துவிட்டோம். இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பின்னர் எதற்காக ராஜபக்சே இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உதவியுடன் இலங்கை அரசு தமிழர்கள் மீது ஏவிய போர்க்குற்றங்களை மனித தன்மையற்ற செயலை, தமிழ் மக்களின் வலியை நரேந்திர மோடியும் அவரது அரசும் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.
நாங்கள் இங்கு பதவியேற்பு விழாவுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரானவன் அல்ல. இந்த நாட்டை உயர்த்திச் செல்ல பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment