Lebal

Sunday, May 18, 2014

கனேடிய நாடாளுமன்றத்தின் பொதுநலவாய மண்டபத்தில் - 'நசுக்கப்பட்ட குரல்களின் நினைவு'


மே 15, 2014 அன்று, கனேடிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பொதுநலவாய மண்டபத்தில் இடம்பெற்ற மே 2009ன் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியற் கட்சிகளைச் சேர்ந்த செனற்றர்கள் கலந்துகொண்டனர். சிறிலங்காவின் குருதி தோய்ந்த யுத்தத்தின் முடிவில் பல ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிகழ்வானது 'நசுக்கப்பட்ட குரல்களின் நினைவு' என்கின்ற தலைப்பில் கனேடிய தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்கினர். போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் வணக்க நிகழ்வை மேற்கொண்டனர்.










இந்த நிகழ்வின் ஆரம்ப உரையை கனடாவின் ஆளும் பழமைவாதக் கட்சியின் ஸ்காபொறோ மையத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் Roxanne James மேற்கொண்டதுடன், போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மலர்தூவி வணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வை மிகச் சாத்தியமான ஒரு நிகழ்வாக மாற்றுவதற்கு இவர் துணையாக இருந்தார்.

ஒற்றோவா மையத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகார விமர்சகருமான Paul Dewar எதிர்க்கட்சித் தலைவர் மாண்குமிகு தோமஸ் மல்கெயாரின் அறிக்கையை வாசித்தார். "போரின் போது நசுக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள் மற்றும் சிறார்களை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். இவ்வாறான ஒரு மிகவும் துன்பகரமான நிகழ்வை நினைவுகூராமல் நாம் இருக்கமுடியாது" என தனது செய்தியில் திரு.மல்கெயர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று எற்றோபிகொக் வடக்குப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி கிறிஸ்ரி டுங்கன் உரையாற்றியதுடன், லிபரல் கட்சியின் செனற்றர் டேவிட் சுமித், தனத கட்சியின் தலைவர் ஜஸ்ரின் றுடியூவின் அறிக்கையை வாசித்தார். புதிய ஜனநாயகக் கட்சியின் கிழக்கு கமில்ரன் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை மீறல் விமர்சகருமான Wayne Marston மற்றும் லிபரல் கட்சியின் ஸ்கார்போறோ – கில்ட்வூட் பகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் John McKay, பழமைவாதக் கட்சியின் செனற்றர் Don Meredith மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் ஸ்கார்போறொவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆகியோர் இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரைகளை ஆற்றினர்.

பறீ பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த நிகழ்வின் அணுசரணையாளருமான Patrick Brown இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் அனைத்து அரசியற் கட்சிகளையும் சேர்ந்த செனற்றர்கள் பங்குபற்றினர். படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பிரமுகர்களும் கறுப்பு நிற நாடாக்களை அணிந்து கொண்டனர். சிறிலங்காவில் மே 2009ல் நசுக்கப்பட்ட குரல்களை நினைவுகூர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் இடம்பெற்றது.

சிறிலங்காவில் நீதி மற்றும் சமாதானத்தை எட்டுவதற்காக கனேடிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது. கனடாவின் அனைத்து அரசியற் கட்சிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றியதை கனேடியத் தமிழர் பேரவை பாராட்டியதுடன், தமது நாடாளுமன்றப் பணிகளுக்கும் அப்பால் நேரத்தை ஒதுக்கி இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

No comments:

Post a Comment