இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளமாட்டார் என்று உறுதியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாதம் அவர் பூட்டானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் தங்குமிட ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று இன்று பூட்டானுக்குப் பயணமாகவுள்ளது.
தற்போது நடைபெறும் இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்த பின்னர், பெரும்பாலும், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தப் பயணம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா உள்ளிட்ட சார்க் நாடுகள் அனைத்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தன.
சிறிலங்காவுக்கு அவர் முதல் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.
எனினும், கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில், சிறிலங்கா, பாகிஸ்தானுக்கான பயணங்கள் குறித்து கலந்துரையாடப்படவேயில்லை என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூட்டான், நேபாளம், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்வது குறித்தே, கலந்துரையாடப்பட்டுள்ளது.
இறுதியில் முதல் பயணத்தை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான பூட்டானுக்கு மேற்கொள்வது என்று முடிவாகியுள்ளது.
இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறேசிலில் அடுத்த மாத நடுப்பகுதியில் நடக்கவுள்ள பிறிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பில், பிறேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment