ஈழத் தமிழர்களின் அடிமை விலங்கொடிக்க, அகிம்சைப் பாதையில் உயிரைக் கொடுத்த தியாக தீபம் திலீபன் அவர்களது 23 ஆவது நினைவு தினத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு தனது இரண்டாவது அமர்வை மேற்கொள்ளுகின்றது.
எதிர்வரும் 29 ஆம் திகதி அமெரிக்காவில் ஆரம்பமாகி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வு ஆக்க பூர்வமான பல வெற்றிக்கான அடித்தளங்களை இடும் என்று பிரான்ஸ் - தமிழீழ மக்கள் பேரவையினராகிய நாம் பெரும் நம்பிக்கையோடு வாழ்த்துகின்றோம்.
'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' தான் வலிந்து ஏற்றுக்கொண்ட போராட்டப் பாதையின் இலக்குத் தவறாமல், தமிழீழத்தை வென்றெடுக்கும் இலட்சியத்தில் தொடர்ந்தும் பயணிக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழீழ மக்களின் இந்த அகிம்சைப் போர்க் களத்தை முன் நின்று முன் நகர்த்தும் திறமைசாலிகளும், தற்துணிவுள்ளவர்களும் பதவி நிலைகளைக் குறி வைக்காது, தியாகத்தை முன் நிறுத்தி 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்' இலட்சிய வெற்றிக்காகப் பணியாற்ற இந்நாளில் திடசங்கற்பம் பூண வேண்டும் என்ற எமது பேரவாவையும் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்' மக்கள் பிரதிநிதிகளிடம் முன்வைக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதிகளாக்கிய மாவீரர்கள், அவர்களோடு போர்க் களங்களில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழீழ மக்கள் அனைவரதும் ஆன்மார்த்த சிந்தனைகளும், கனவுகளும் இந்தப் போர்க் களத்தை நெறிப்படுத்தும் என்ற பெருநம்பிக்கை எமக்கு உண்டு.
ஆனாலும், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் கருவிப் போர்க் களத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான எதிரிகளும், துரோகிகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் குறி பார்ப்பார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் கடந்த வருடத்தில் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், மக்கள் பேரவையும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழீழ விடுதலைப் போர்க் களத்தில் இணைந்து போராடும்' என்று உறுதியாகக் கூறிய வார்த்தை இன்றுவரை நிதர்சனம் இல்லாமல் போனதற்கும் இந்த நாசகார சக்திகளே தடைக் கற்களாக உள்ளார்கள் என்பதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
'தேசியத் தலைவரின் தெய்வ வாக்குகளை நாம் மதித்து நடக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் மட்டும்தான் மௌனிக்கப்பட்டதேயல்லாமல் இறமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டிற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கையோ அல்லது அதற்கான அரசியல் போராட்டமோ அல்ல என்பதை தேர்வு செயப்பட்ட பிரதிநிதிகள் தொடக்கம் மக்கள்வரை மறந்துவிடக்கூடாது. நமது ஒவ்வொரு முன்னெடுப்பும் எமது இலட்சியப் பாதையை நோக்கியதாகவே அமையவேண்டும்' என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய மக்கள் பிரதிநிதி கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியல் யாப்பை இறுதி செய்யும் இந்த நாட்களில், அமையப்போகும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான சட்டப் பேரவைக்கான தேர்வும்இ நிறைவேற்றுப் பேரவைக்கான தெரிவுகளும் இடம்பெறவுள்ளது. இது புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தமிழர்களின் பதவிப் போராட்மாக அல்லாமல்இ சிங்கள பேரினவாதப் போரில் சிதறடிக்கப்பட்டு, வாழ்விழந்து, கூனிக் குறுகிப்போய் வாயடைத்து நிற்கும் ஈழத் தமிழினத்தை மீட்பதற்கான புதிய போர்க் களத்தின் தளபதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதாக அமைய வேண்டும்.
தமிழீழ மக்களின் விடுதலைத் தீயை, தற்போதைய அவர்களது அவல வாழ்க்கையினுள் முடக்கி விடுவதே எதிரியின் இலட்சியமாக உள்ளது. மீள் குடியேற்றம் என்ற பெயரில் அலைக்களிக்கப்படும் வன்னி மக்களை 'புனர்வாழ்வு' என்ற பிச்சைப் பாத்திரத்துடன் வாழ்வைத் தொடர வேண்டும் என்பதே எதிரியின் திட்டமாக உள்ளது. இயல்பு வாழ்வும், பாதுகாப்பும் மறுக்கப்பட்ட மக்களிடம் புனரமைப்பு என்பதும், அபிவிருத்தி என்பதும் அவர்களது அவல வாழ்வைத் தொடர வைக்கும் தந்திரம் மட்டுமே.
பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரால் நிரப்பப்பட்டுள்ள வன்னி மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அந்த மக்களின் உயிருக்கும், உடமைக்கும்,எதிர்காலத்திற்கும் எந்த நிச்சயமும் இல்லை. அவர்கள் தங்களுக்கான வாழ்வைத் தாமே தீர்மானிக்கவும், தங்கள் உறவுகளோடு பேசி உறவாடவும், தங்கள் சொந்தங்களோடு சிரித்து மகிழவுமான அவர்களது வாழ்வு அவர்களுக்கு வேண்டும். அதுவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவசர செயற்திட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
தமிழீழ மக்களது அவலங்களுக்காகவும், அவர்களது விடுதலைக்காகவும் பிரான்சிலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்டமைப்புக்களுடனும் இணைந்து போராடிவரும் தமிழீழ மக்கள் பேரவையினராகிய நாம், சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதி மன்றங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியையும், தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சிறிலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் கோரிக்கையையும் வேகமாக முன்னெடுத்து வருகின்றோம். தமிழீழ மக்களுக்கான இந்த மனித நேயப் பணியில் நாம் பெற்ற அனுபவங்களையும், எமது முன்நகர்வுகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளவும் ஆவலாக இருக்கின்றோம்.
பிரான்சில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து பணியாற்றுவதையே பிரான்சில் வாழும் அனைத்துத் தமிழர்களும் விரும்புகின்றார்கள். தமிழீழ விடுதலையை இலட்சியமாக வரித்துக் கொண்ட நாம் இந்தப் புதிய போர்க் களத்தில் ஒன்றாக இணைந்து பயணிப்பதன் மூலமாகவே தமிழீழ விடுதலைப் போர் விரைவு பெறும். அந்த ஒன்றிணைவுக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பாடுபட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தத் தருணத்தில் உங்கள் அனைவர் முன்பாகவும் முன் வைக்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்

No comments:
Post a Comment