அன்பார்ந்த தமிழ் சகோதரங்களே! இன்றைய காலத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகவும் சிக்கலான, மிகவும் துக்ககரமான காலத்தில் இருக்கின்றோம். ஒரு பக்கத்தில் நாட்டில் மிக வேதனையை அனுபவித்துவரும் உறவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற நாங்கள் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய கட்டம்.புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதன் காரணமாக எமக்கு நடந்த தன்ப துயரங்களை மறந்து வாழ முடியுமா? எமக்கு விடப்பட்ட சவால்களை மறக்க முடியுமா?
இன்றைய நாட்களில் சர்வதேச நாடுகளுக்கு, எமது நிலைமையை, எமது வேண்டுகோளை புலம் பெயர்ந்த தமிழ் மக்களாகிய நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.அந்த வகையில், அதற்குரிய தொடக்கத்தை இளைஞர்கள், உணர்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனாலும் தமிழ் மக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். விசேடமாக நடைப்பயணத்தை தொடர்ந்து வருகின்ற உணர்வாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.
திரு. சிவந்தன் அவர்களினால் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி ஆரம்பிக்கப்பட்டது நடைப்பயணம். அதனைத் தொடர்ந்து ஜெனீவாவில் இருந்து பெல்ஜியம் நோக்கி தொடரப்பட்டு வருகிறது மூன்று உணர்வாளர்களின் நடைப்பயணம்.திரு. ஜெகன் அவர்களின் தலைமையில், மேலும் இருவர் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைமையகம் இருக்கும் புறூக்சல் நகரம் நோக்கி தொடரப்படும் இந்த நீண்ட பயணங்கள், நடைப்பயணம் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
அன்று மகாத்மா காந்தி அவர்களின் உப்புச் சத்தியாக்கிரகம். மனித நேயத்திற்காக நடந்தார் மாட்டின் லுதர் கிங் அவர்கள். நெல்சன் மண்டேலா என்று கூறிக் கொண்டு போகலாம்.விடுதலைப் போராட்டங்கள் தமது பயணத்தை வெவ்வெறு வழிகளில் தொடரும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். அதிலும் சர்வதேச மக்களின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
கொடிகளுடன் ஏனைய தமிழ் மக்களும் வரும் போது நமது செய்தியை அது பறைசாற்றும்.தாயக மக்களின் விடுதலை ஏக்கத்தை மனதில் சுமந்து, நீதிக்கான நடைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் உறவுகளுடன் இணைந்து, ஐரோப்பியவாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, அதன் முக்கியத்துவத்தை இந்த உலகுக்கு பறைசாற்ற வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
மண்ணிலே மண் காப்பாற்றப்பட வேண்டும். மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். புலம் பெயர் வாழ் மக்கள் மௌனித்து இருக்காமல், தோழமையாகவும், சமாதானமாகவும் இருக்கவேண்டும் என்பது எனது தயவான வேண்டுகோள்.
எதிர்வரும் 27.09.2010 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.
உங்கள் அன்பான
S.J. இமானுவல்

No comments:
Post a Comment