Sunday, December 26, 2010

தளபதியா... கேப்டனா..? - அரசியல் கவுன்ட் டவுன் இனிதே ஆரம்பம்!

ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு சென்ற வார சென்சேஷன். ஏன் இந்த திடீர் சந்திப்பு? விஜய் சந்திரசேகரனுக்கு நெருக்கமான கோடம்பாக்கப் புள்ளியிடம் பேசினோம். ''விஜய் அரசியலில் இறங்குவது திடீர் முடிவல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு இது. அதற்கான வேளை இப்போது வந்து விட்டது. கிட்டத்தட்ட விஜய்யை அ.தி.மு.க பக்கம் கொண்டுபோய்க் கரை சேர்த்ததே தி.மு.க-தான். 'தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம்?’ என்று சர்வே எடுத்தபோது கிடைத்த பதில் 'விஜய்’. இந்தத் தகவல் ராகுலுக்குச் செல்ல விஜய்யை விரும்பி டெல்லிக்கு அழைத்தார். உண்மையில் விஜய்க்கு காங்கிரஸில் இணைய விருப்பமே இல்லை. இருந்தாலும் ராகுலை விஜய் சந்தித்தது ஆளும் கட்சிக்குப் பிடிக்கவில்லை. எனவே விஜய்க்குக் குடைச்சல் கொடுக்க ஆரம் பித்தார்கள்.


ஈரோடு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாஜியின் கல்யாணம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதில் கலந்துகொள்ள விஜய் சென்றார். திருமணத்தை முடித்துவிட்டு மக்களுக்கு நலத் திட்டப் பணிகள் உதவிகள் வழங்கும் விழாவைப் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் நடத்த முடிவு செய்திருந்தார்கள் ரசிகர்கள். அலை அலையாகத் திரண்ட ரசிகர்களைக் கண்டு கதிகலங்கிப் போனார்கள் மாவட்ட தி.மு.க-வினர். ஏற்கெனவே 'கோவை மாவட்டத்தில் தி.மு.க வீக்’ என்று கோபத்தில் கருணாநிதி வேறு பேசியிருந்தார். உடனடியாக போலீஸ்காரர்கள் மூலமாக நலத் திட்ட விழா நடப்பதையே நிறுத்த முடிவு செய்தார்கள். ஆர்வமாக விழா மேடைக்கு கிளம்பிய விஜய்யைத் தடுத்து நிறுத்திய போலீஸார் ''கூட்டம் அதிகமா இருக்கு. நீங்க மேடைக்குப் போக வேண்டாம். மீறிப் போய் ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நாங்க பொறுப்பு இல்லை'' என்று கடுகடுத்தார்கள். விஜய்க்கு பாதுகாப்பும் தராமல் அவமா னப்படுத்தினார்கள். மேடைக்குச் செல்ல முடியாமல் தவித்த விஜய்அப்போதே ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளுக்குள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார். விழாவில் கலந்துகொள்ளாமலேயே கனத்த மனசோடு சென்னையும் திரும்பிவிட்டார்.

இன்னொரு பக்கம் சென்னை அண்ணா நகரில் விஜய்க்குச் சொந்தமான இடத்தில் கட்டட வேலை நடந்து வருகிறது. அங்கே தினசரி வரும் ஒரு தி.மு.க வட்டச் செயலாளர் கட்டட வேலை பார்ப்பவர்களை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு விஜய் ஆசையோடு இருந்த நேரத்தில் அவரைப் படத்தில் இருந்து நீக்கச் சொல்லி பிரஷர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று முடிவு செய்துவிட்டார் விஜய். இடையில் அ.தி.மு.க-விடம் இருந்து விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவான சிக்னல்கள் வந்துகொண்டே இருந்தன. தி.மு.க-வை எதிர்க்க அ.தி.மு.க-வோடு கை கோப்பதே சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்'' என்றார் அவர்.

விஜய் என்னதான் நினைக்கிறார்? அவரிடமே பேசினோம். ''சாதாரணக் குடும்பத்தில் பிறந்த என்னைத் தமிழக மக்கள்தான் பெரிய நடிகனாக ஆக்கி அழகு பார்த்தாங்க. அவங்களோட ஆசீர்வாதத்தில்தான் என் குடும்பமே வாழ்ந்துட்டு இருக்கு. என்னை வாழ வைக்கும் மக்களுக்கு நன்றிக்கடனா ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். அதனால் கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்'' என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.

ஜெ-வைச் சந்தித்துவிட்டு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் ''கடந்த 11-ம் தேதி சாயங்காலம் 4 மணிக்கு மேடத்தைச் சந்தித்தேன். மலர்ந்த முகத்தோடு வரவேற்றாங்க. 40 நிமிஷம் பல விஷயங்கள் பத்திப் பேசினோம். ஒரு நல்ல தலை வரைச் சந்திச்ச சந்தோஷம் என் மனசு பூரா இருக்குது. விஜய்க்கு தனியா அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. இன்றைய சூழ்நிலையை மனதில்கொண்டு மக்கள் இயக்கத்தின் மாநாட்டை ஜனவரி மாசக் கடைசியில் மதுரை அல்லது திருச்சியில் நடத்த இருக்கிறோம்'' என்று முடித்துக் கொண்டார்.

அ.தி.மு.க என்ன நினைக்கிறது? அ.தி.மு.க-வின் மூத்த புள்ளி ஒருவரிடம் பேசினோம். ''விஜயகாந்த்தோடு கூட்டணி வைக்கும் முடிவில்தான் அம்மா இருந்தார். ஆனால் விஜய்யின் வருகை அம்மாவை யோசிக்க வைத்துவிட்டது. ஏனென்றால் விஜயகாந்த்இ அ.தி.மு.க-வுக்குக் கட்டுப்பட்டு நடப்பாரா என்கிற கவலை அம்மாவுக்கு உண்டு. இதுபோக அம்மாவிடம் 60 ஸீட்டுகள் கேட்டு விஜய காந்த் டிமாண்ட் செய்கிறார். தே.மு.தி.க-வுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்று அம்மா யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்து இருக் கிறது. அதிரடியான விஜயகாந்த் ஒரு பக்கம் இருக்க அமைதியான விஜய் வருகையை அம்மா ரொம்பவே ரசிக்கிறார். இளைஞர்களை அ.தி.மு.க பக்கம் ழுப்பதற்கு விஜய் நிச்சயம் பயன்படுவார் என்பது அம்மாவின் எண்ணம்.

விஜய்யின் வருகையைவைத்து விஜயகாந்த்தின் அதிகப் படியான ஸீட் டிமாண்டையும் காலி செய்து விடலாம் என்பதும் அம்மாவின் கணக்கு. விஜய்யை வைத்து விஜயகாந்த்தை வழிக்குக் கொண்டுவருவது சரத்குமாரை உள்ளே இழுப்பது என அடுத்தடுத்த அரசியல் மூவ்களில் ஆர்வமாக இறங்கிவிட்டார் அம்மா. எல்லாம் சரியாக நடந்தால் விஜய் - விஜயகாந்த் - சரத் என்கிற நட்சத்திர பலத்தைக்கொண்டு தி.மு.க-வை வீழ்த்துவது அம்மாவின் திட்டம். இதற்கு விஜயகாந்த்தின் ரியாக்ஷனைப் பொறுத்து அம்மாவின் திட்டங்கள் மாறும். விஜயகாந்த்துக்கும் தி.மு.க-வுக்கும் செக் வைக்கும் வகையில் விஜய் நடத்தும் மக்கள் இயக்க மாநாட்டில் அம்மா கலந்துகொள்வார் என்று நினைக்கிறேன்''- அர்த்தபுஷ்டியாகச் சிரிக்கிறார் அந்தப் புள்ளி.
ஆஹா... அரசியல் சூடு ஆரம்பம்!
 


நன்றி:விகடன்

No comments:

Post a Comment