இந்தியாவின் பிரதமர்,தமிழக முதலமைச்சர் கருணாநிதி உட்பட பல முக்கியஷ்தர்களை படுகொலை செய்வதற்கு புலிகளின் அணி ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக கூறி இந்திய புலனாய்வு அமைப்பான றோ அமைப்பு திட்டமிட்டு பொய் பரப்புரையை மேற்கொண்டிருந்தது.
இந்தநிலையில் றோ அமைப்பு இன்றும் ஒரு பொய்யான வதந்தியை பரப்பி இலங்கை அரசை பல நெருக்கடிகளிலிருந்தும் தப்பிக்க வைப்பதற்கு புலிகள் மீண்டெழவுள்ளதாகவும் இலங்கையின் முக்கிய பல பகுதிகளை தாக்கியழிக்கவுள்ளதாகவும் பொய் வதந்தியை பத்திரிகையூடாக வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு……
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரபுக்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு றோ உளவுப் பிரிவு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் சூழ்ச்சித் திட்டம் அம்பலமாகியதனைத் தொடர்ந்து, குறித்த கும்பல் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கலாம் என றோ உளவுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பெருமளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வரும் சந்தர்ப்பத்தில், அகதிகள் என்ற போர்வையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த புதிய முயற்சியை முறியடிக்கும் நோக்கில் மேற்குலக நாடுகளின் தூதுவராலயங்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்னர்.
இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய புலிகள் சூழ்ச்சித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இழக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சூழ்ச்சித் திட்டமே பிரதான காரணி என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போர்க் குற்றச் செயல் தொடர்பான, பான் கீ மூனின் ஆலோசனைக் குழு ஏதேனும் காரணங்களுக்காக சில வேளைகளில் இலங்கைக்கு விஜயம் செய்தால், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் நலன்களுக்காக பாவித்து, புலிகளைச் சாட்டாக வைத்தே காலத்தை கடத்தப்போகின்றது அரசாங்கம். அதற்கான உத்தியே புலிகளின் மீள் எழுச்சிக்கான கட்டுக்கதைகள் என புலம்பெயர் ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment