ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இந்நாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியுமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் விபச்சார விடுதிகள் நடத்தி வருகின்றனர் என்று அமெரிக்காவின் இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக்கினால் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தில் இது கூறப்பட்டு உள்ளது. இந்த ஆவணத்தை விக்கிலீக்ஸ் இணையத்தளம் இன்று பரகசியப்படுத்தியது. இதில் அதிர்ச்சியூட்டக் கூடிய, பயங்கரமான விடயங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை தொகுத்துத் தருகின்றோம்.
" மட்டக்களப்பு மாவட்டத்தில் அகதி முகாம்களில் தங்கி இருக்கும் பெண்களை அரச படையினரைக் கவனிக்கின்றமைக்காக வெளியில் விபச்சாரத்தில் கருணா குழுவினர் ஈடுபடுத்தி வருகின்றனர். பெண்களுக்கு கருணா குழுவினரின் நிர்ப்பந்தங்களை அனுசரித்து நடக்கின்றமையைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. இவர்கள் கட்டாயம் விபச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் பிள்ளைகளை கருணா குழுவினருக்கு காவு கொடுக்க வேண்டி ஏற்பட்டு விடும். இதே மாதிரியான நிலைமைதான் யாழ்ப்பாணத்திலும்.
யாழ்ப்பாணத்தில் டெல்ப் தீவு ஈ.பி.டி.பியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் விதவைகள் அதிகம். ஈ.பி.டிபியினர் டெல்ப் தீவுக்கு அருகில் உள்ள அயல் கிராமங்களைச் சேர்ந்த விதவைப் பெண்கள் மற்றும் இந்த விதவைப் பெண்களின் பிள்ளைகள் ஆகியோரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். பொருளாதார பாதுகாப்புக்களை பெற்றுத் தருவார்கள் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். ஈ.பி.டி.பியினர் முதலில் இப்பெண்களுடன் நல்ல உறவை வலுப்படுத்துவார்கள்.
பின் பிள்ளைகளை விபச்சாரத்துக்கு கொண்டு செல்வார்கள். சில சந்தர்ப்பங்களில் பலாத்காரமாகவும் விபச்சாரத்துக்கு கொண்டு செல்வர். சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவார்கள் என்று வாக்குறுதிகளை வழங்கியும் பிள்ளைகளை கொண்டு செல்வர். ஈ.பி.டிபியின் வலையமைப்பு இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உண்டு. இந்நாடுகளில் விபச்சாரம் செய்ய யுவதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் இலஞ்ச பேர்வழிகளான சுங்க உத்தியோகத்தர்கள் மற்றும் குடிவரவு உத்தியோகத்தர்கள் ஆகியோரின் அனுமதியுடன் இப்பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு விபச்சாரத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
அரச படையினரை திருப்திப்படுத்துகின்றமைக்காகவும் ஈ.பி.டி.பியினர் தமிழ் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இளம்பெண்கள் பலாத்காரமாக தூக்கிச் செல்லப்படுகின்றனர். கட்டாயப்படுத்தி படையினருடன் செக்ஸில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு இரவில் ஐந்து, ஆறு படையினருடன் செக்ஸ் பண்ண வேண்டி இருக்கும். ஆனால் ஒவ்வொரு செக்ஸ் சேவைக்கும் இளம்பெண்களுக்கு தலா ஒரு அமெரிக்க டொலர் வரைதான் கொடுக்கப்படும். இவர்களின் குடும்பத்தினர் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் எவருக்கும் முறையிட முடியாத நிலை.
தண்டிக்கப்படலாம் அல்லது பழிவாங்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். பெண் பிள்ளைகளின் சுய மரியாதை, கௌரவம், எதிர்காலம் பாழாகி விடும் என்று பயப்படுகின்றனர். பெண் பிள்ளைகள் ஒரு போதும் திருமணம் செய்ய முடியாத நிலை கூட ஏற்பட்டு விடலாம் என்கிற பீதியும் உண்டு. கருணா, டக்ளஸ் ஆகியோர் பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றமையால் பெற்றோர் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு திருமணம் செய்விக்கின்றார்கள். கருணா குழுவினருக்குப் பயந்து 12, 13 வயது பெண் பிள்ளைகளுக்குகூட பெற்றோர் திருமணம் செய்விக்கின்றனர். இதே நிலைதான் யாழ்ப்பாணத்திலும்.
திருமணம் ஆகி விட்டால் பிள்ளைகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சந்தர்ப்பங்கள் குறைவு என்பது பெற்றோரின் நம்பிக்கை. விபச்சாரத்தில் மட்டும் அன்றி ஆட்கடத்தல், கப்பம் கோரல், சட்டத்துக்கு புறம்பான படுகொலைகளை செய்தல், போதைப் பொருள் விற்றல் ஆகியவற்றிலும் இந்த துணை ஆயுத குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துணை ஆயுத குழுவினருடன் தொடர்புகள் கிடையாது என்று அரசு மறுத்து வருகின்றது. ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க இந்த துணை ஆயுத குழுவினருக்கு நேரடியாக பணம் கொடுத்து வந்தார். ஆனால் மஹிந்த ராஜபக்ஸ நேரடியான பணக் கொடுப்பனவை வெட்டி விட்டது.
ஆனால் இந்த துணை ஆயுத குழுவினரின் ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்றவற்றை கண்டும் காணாத மாதிரி உள்ளது. துணை ஆயுதக் குழுக்களை நாட்டில் செயல்பட வைப்பதால் அரசுக்கு நன்மையே. புலிகளை ஒழித்தல், புலிகளின் மக்கள் ஆதரவை குறைத்தல், புலிகளின் ஆட்சேர்ப்பைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு துணை ஆயுதக் குழுக்களின் உதவிகள் நிறையவே உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை கடத்திப் படுகொலை செய்கின்றமை மூலம் துணை ஆயுதக் குழுவினர் கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றனர். அரசுக்கு எதிரான விமர்சகர்களை பயமுறுத்திப் பேசாமடந்தைகள் ஆக்கி விடுகின்றனர்.
கருணா, தேவானந்தா ஆகியோரை முறையே கிழக்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களின் அரச சார்பு அரசியல் தலைவர்களாக வைத்திருப்பதே அரசின் நோக்கம். இம்மாவட்டங்களில் ஒரு வேளை அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறக் கூடும் என்பதால் இம்மாவட்டங்கள் இத்தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றமை தூர நோக்கில் நன்மை கொடுக்கும் என்பது அரசின் கணிப்பு. ஆனால் துணை ஆயுதக் குழுவினரின் செயல்பாடுகள் அரசை தர்ம சங்கடங்களுக்கு உட்படுத்தி விடுகின்றமையும் உண்டு. யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் சில இராணுவ தளபதிகள் துணை ஆயுதக் குழுவினரை அடக்க விரும்புகின்றனர்.
ஆனால் துணை ஆயுதக் குழுவினரின் செயல்பாடுகளில் மூக்கு நுழைக்க வேண்டாம் என்று பாதுகாப்பமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருந்து இராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இராணுவத்தால் சில செயல்பாடுகளை செய்ய முடியாது. அவற்றை துணை ஆயுதக் குழுவினர் செய்து முடிக்கின்றனர். வீணாக துணை ஆயுதக் குழுவினரின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சால் தளபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இலங்கை அரசுகள் நீண்ட காலமாக துணை ஆயுதக் குழுக்களுக்குப் பணம் வழங்கி வருகின்றன.
துணை ஆயுதக் குழுக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகதான் சந்திரிகா தலைமையிலான முன்னாள் அரசு பணம் வழங்கியது. ஆனால் மஹிந்த அரசு இப்பணக் கொடுப்பனவை முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் ஈ.பி.டி.பி, கருணா குழுவினர் ஆகியோர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து பணம் பெற பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரம் வழங்கி உள்ளார். வவுனியா, கொழும்பு போன்ற மாவட்டங்களில் கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற சட்டவிரோத செயல்பாடுகள் அதிகரிக்கின்றமைக்கு இதுவே காரணம். கருணா, தேவானந்தா ஆகியோரும் இவர்களின் ஆட்களும் தமிழர்களாக உள்ளனர்.
ஆனால் இவர்களின் குற்றச் செயல்கள் தமிழர்களுக்கு எதிரானவையாகவே எப்போதும் உள்ளன. கடத்தல்கள், கப்பம் கோரல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகளை செய்தல் ஆகியவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருவது கருணாவின் துணை ஆயுதக் குழுவே. அரசின் உத்தரவின் பேரில் கருணாவால் கொல்லப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அஞ்சுகின்றனர். தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாவால் கொல்லப்படலாம் என்று எமக்கு அச்சம் தெரிவித்து உள்ளார்கள்.
2005 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் தேவானந்தாவின் ஆதரவுடன் கருணாவால் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி கொல்லப்பட்டார் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் ரவிராஜ் எம்.பியை கருணா குழுவினர்தான் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி படுகொலை செய்தனர் என்று நம்புகின்றோம். கருணா கிழக்கில் மட்டும் அன்றி யாழ்ப்பாணத்திலும் செயல்பாடுகளை விஸ்தரித்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அநேக கடத்தல்களுக்கு கருணா குழுவினரே பொறுப்பு என்று நம்பப்படுகின்றது. புலிகளுடன் தொடர்பு உடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டார்.
கருணாவின் புகைப்படம் ஒன்று கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டவரின் முன் பக்கத்தில் தொங்க விடப்பட்டது. கலண்டர் ஒன்று பின் பக்கத்தில் தொங்க விடப்பட்டது. கடத்தப்பட்டவரின் காலம் நெருங்கி விட்டது என்பதையே கலண்டர் காட்டியது. கருணா குழுவினர் அரசின் ஆசிர்வாதத்துடன் கிழக்கில் உள்ள நலன்புரி முகாம்களில் இருந்து சிறுவர்களை பலாத்காரமாக ஆட்சேர்க்கின்றனர். சராசரியாக 14 வயது உடைய சிறுவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சர்வதேச மட்டத்தில் பணம் சேகரிக்கும் வலையமைப்பு கருணாவிடம் இல்லை. ஆகவேதான் இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
கொழும்பில் இருந்து கிழக்கில் உள்ள அகதி முகாம்களுக்கு அரசால் அனுப்பப்படுகின்ற உணவு முதலில் கருணா குழுவினருக்குதான் வழங்கப்படுகின்றது. தேவைப்படும் அளவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பெற்றுக் கொண்ட உணவுப் பொருட்களை இவர்கள் விற்பனை செய்யவும் முடியும். அரசு கருணா குழுவினருடன் தொடர்பு இல்லை என்று கூறி வந்தாலும் கூட கருணாவை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து இருக்கின்றார்.
விபச்சாரம் மட்டும் அன்றி யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரல்கள், கடத்தல்கள், நீதிக்கு புறம்பான கொலைகள் ஆகியவற்றையும், இன்னும் பல குற்றச் செயல்களையும் ஈ.பி.டி.பியினர் செய்து வருகின்றனர். படுகொலை ஒன்றை திட்டமிட்டு இருந்தால் இவர்கள் முதலில் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பார்கள். சிப்பாய்கள் கடமை மாறும் நேரத்தில் முகமூடிகள் அணிந்த துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிள்களில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்.
சிப்பாய்கள் கடமைக்கு திரும்புவார்கள். வழமையான பொலிஸ் விசாரணைகள் இடம்பெறும். ஆனால் பெரும்பாலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டனர் என்றோ கைது செய்யப்பட்டனர் என்றோ சரித்திரம் இல்லை. ஈ.பி.டி.பியினர் சிறுவர்களை போதைப் பொருள் கடத்தல்களிலும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment