Friday, December 31, 2010

தனது ஊழலை மறைக்கவே ஈழத் தமிழர்களைப் பலி கொடுத்தார் கருணாநிதி!


மறைந்த தமிழக நடிக மேதை சிவாஜி அவர்களது மரண நிகழ்வில்கலந்து கொண்ட கலைஞர், ‘எனது ஆட்சிக் காலத்தில் இறந்திருந்தால், அரச மரியாதை வழங்கியிருப்பேனே…!’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


தற்போது, தமிழகத்தின் தி.மு.க. தொண்டர்களும், கலைஞரது இலக்கிய நண்பர்களும் அப்படித்தான் வருந்துகிறார்கள். கலைஞரது இன்றைய தருணம் அப்படித்தான் உள்ளது. தன்னையும், தனது குடும்பத்தையும் முதன்மைப்படுத்தும் தமிழக அரசியலில் அடிக்கும் ‘ஸ்பெக்ரம்’ சுனாமி அலை அவரது கனவுகள் அனைத்தையும் காவு கொண்டு விடும் என்றே தோன்றுகின்றது.

பேரறிஞர் அண்ணாவின் திடீர் மறைவினால் எழுந்த வெற்றிடத்தைச் சாமர்த்தியமாகக் கைப்பற்றிய முத்துவேலர் கருணாநிதி என்ற மனிதன், அதனைத் தொடர்ந்து தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொண்ட அரசியல், பொளாதார சாம்ராஜ்யம் பிரமிக்கத் தக்கது. தற்போதைய நிலவரப்படி, அவரது குடும்ப உறுப்பினர்களது அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பு தமிழகத்தையும் தாண்டி டெல்லி வரை வியாபித்துள்ளது. அரசியலை அடுத்து, கருணாநிதி குடும்பத்தின் தமிழக சினிமா மீதான ஆக்கிரமிப்பால் முன்னணிக் கதாநாயகர்களே அதிர்ந்து போயுள்ளார்கள்.

இந்த நிலையில் உருவான ‘ஸ்பெக்ரம்’ பூகம்பம் அவரது குடும்ப அரசியலின் எதிர்காலத்தை சுக்கு நூறாகச் சிதைக்க ஆரம்பித்துவிட்தாகவே உணரப்படுகின்றது. அடுத்த இரு மாதங்களில் வர இருக்கும் தமிழக சட்ட சபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கான வாய்ப்பை இப்போதே இழந்துவிட்டதாத் தமிழக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைத்துக்கொள்ள தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் உளவுத்துறை மூலம் கிளப்பிவிடப்பட்ட  »விடுதலைப் புலிகள் இந்தியத் தலைவர்களைக் குறி வைத்துக் களம் இறங்கியுள்ளார்கள்.

கலைஞர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அவர்களது இலக்காக உள்ளனர் » என்ற செய்தியும், பாதுகாப்பு நடவடிக்கையும்கூட அவருக்குக் கை கொடுக்கவில்லை. அதுவும் ‘பூமராங்’ ஆக மாறி அவரையே தாக்கியது.  »தமிழர்களே, நீங்கள் என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டு மரமாக மிதப்பேன். அதில் நீங்கள் ஏறிப் பயணம் செய்யலாம் » என்று வசனம் பேசிய கலைஞர் கருணாநிதி, வாழ்வின் இறுதிக் காலத்தில் உள்ள தன்னை விடுதலைப் புலிகள் கொலை செய்யச் சதி செய்கிறார்கள் » என்ற பெரும் குற்றச்சாட்டை ஈனத் தளமாக முன் வைத்த போதும் தமிழக மக்களும், தமிழக ஊடகங்களும் அதனை முற்றாகவே நிராகரித்தார்கள்.

எம்.ஜி.ஆர். என்ற அற்புதமான மனிதன் தமிழகத்தில் இருந்திருக்காவிட்டால், கருணாநிதி அவர்களது இந்தக் குடும்ப ராஜ்யம் எப்போதோ நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களது ஊழல்களை அம்பலப்படுத்தியதால், தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த விஸ்வரூபம் தமிழக மக்களை அவர் பக்கம் திரட்டியது. திரு. கருணாநிதி அவர்களது கனவு கலைய, எம்.ஜி.ஆர். அவர்கள் தொடர்ந்து 10 வருடங்கள் முதல்வராக இருந்து மறைந்தார்.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது மறைவுக்குப் பின்னர், அவரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல உடைவுகளை அடைந்த போதும், அவரது வாரிசாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் ஆட்சியை இரு தடவைகள் கைப்பற்றி ஆட்சி புரிந்தார். முன் கோபமும், அகங்காரமும் நிறைந்தவரான செல்வி ஜெயலலிதா அவர்களது முடிவுகளும், அவரது ஆட்சிக் காலத்தில் மெற்கொள்ளப்பட்ட ஊழல்களும் மீண்டும் தமிழக முதல்வராக திரு. கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது.

சிங்கள தேசம் தமிழின அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்த காலத்தில், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலும், பதவியிலும் இருந்த கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களின் அழிவை வெறும் பார்வையாளனாக இருந்து வேடிக்கை பார்த்ததை தமிழகத்தின் தமிழின உணர்வாளர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதவர்களாகவே உள்ளார்கள். தமிழகத்தில் எழுந்த உணர்வலைகளும், ஈகைச் சுடரொளி முத்துக்குமாரன் அவர்கள் தொடக்கி வைத்த எழுச்சிகளும் கருணாநிதி அவர்களது மௌனத்தைக் கேள்விக் குறியாக்கிய நிலையில், அரை நாள் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் கேள்விகளற்ற முறையில் சிங்களம் தமிழின அழிப்பை நடாத்தி முடிக்கவும், தப்பிப் பிழைத்த தமிழர்களை முள்வேலி முகாமினுள் வைத்துச் சித்திரவதை செய்யவும் முடிந்தது.

அன்றைய கருணாநிதியின் இந்தக் கொடூரமான நடவடிக்கைகள் குறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்து நிதர்சனமானது. ‘முதல்வர் கருணாநிதி அவர்களும், அவரது அமைச்சர்களும் மிகப் பெரும் ஊழல்களைப் புரிந்துள்ளனர். அது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். இந்த நிலையில் காங்கிரஸ் அரசின் தீர்மானத்தின்படி சிங்கள அரசால் நடாத்தப்படும் இந்த யுத்தத்தை நிறுத்தும்படி ஒரு எல்லைக்கு மேல் இவரால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. தி.மு.க. அரசு தமிழீழ மக்களுக்காக காங்கிரசை எதிர்க்க முற்பட்டால், இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்கள் கையில் எடுப்பார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

தற்போது வெளியாகி, இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஸ்பெக்ரம் ஊழலும் இறுதி யுத்தத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டது என்பதனால், திரு. சி. மகேந்திரன் அவர்களது அன்றைய கருத்தை நிராகரிக்க முடியாது. எனவே, தமிழக முதல்வர் கருணாநிதி அரசியலில் பெரும் ஊழல்களைத் தொடர்வதற்கும், அதனால் பெற்ற பெரும் செல்வத்தைக் காப்பாற்றுவதற்குமாக ஈழத் தமிழர்கள் மீது சிங்கள – இந்திய அரசுகள் நடாத்திய பேரவல, இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்ற உண்மையும் அம்பலப்படுத்தப்படும் ஸ்பெக்ரம் ஊழலுடன் சேர்ந்து வெளி வந்து கொண்டுள்ளது.

முக்காடு போட்டும் மூட முடியாத பெரும் ஊழல் புயலில் கலைஞர் கருணாநிதி தனது குடும்பத்துடன் அம்மணமாக நிற்பதால், எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் அவரது குடும்ப ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றே தமிழகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கமும், ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் ஒரு பக்கமும், கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தால் பெரும் சீற்றத்திற்குள்ளாகியுள்ள தமிழக சினிமாத் துறை ஒரு பக்கமாகவும் தி.மு.க. வை எதிர்த்துப் பல்முனைத் தாக்குதல்கள் நடைபெறும் நிலையில் கருணாநிதியின் கப்பல் கரை சேர்வது சாத்தியமாகாது என்றே நம்பப்படுகின்றது.

- அகத்தியர்

No comments:

Post a Comment