நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22-ந் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும்,
தமிழ் நாட்டில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது.
இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை பல்கலைக்கழக் கழகம் பாரம்பரியமிக்க கல்லூரி நிறுவனம் ஆகும்.
ராகுல்காந்தி நிகழ்ச்சி நடைபெற்றால் நிகழ்ச்சி தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஒட்டியும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். காவல்துறையின் பலத்த கெடுபிடியும் பல்கலைக் கழகத்தில் இருக்கும். இது அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உண்டாகும். அவர்களின் அமைதியான கல்வி கற்கும் சூழலுக்கு தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும்.
இதனை அனுமதிக்க முடியாது. மேலும் இது வரை அங்கு எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றதில்லை. முதல் முறையாக ராகுல்காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் தவறான முன்னு தாரணமாகி விடும். காவல் துறை ராகுல்காந்தியின் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
இதனையும் மீறி ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்தால் நாம் தமிழர் கட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு வரும் 30-ந்தேதி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ராகுல்காந்திக்கு அனுமதி அளித்து எங்களுக்கு அனுமதியை நிர்வாகம் மறுத்தால் நீதிமன்றம் செல்வோம்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment