Saturday, January 01, 2011

சிங்களத்தைத் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ள இந்தியா உருவாக்கும் ‘விடுதலைப் புலிகள்’ கிலி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும்  இந்திய புலனாய்வுப் பிரிவான றோ சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.


இந்த வருட இறுதியில் ‘றோ’ விடுத்துள்ள விடுதலைப் புலிகள் குறித்த இரண்டாவது எச்சரிக்கை இதுவாகும். முதலில், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகிய முக்கிய தலைவர்களைக் கொல்லும் நோக்கோடு விடுதலைப் புலிகள் அணி ஒன்று இந்தியாவினுள் ஊடுருவியிருப்பதாக ஏற்கனவே ஒரு புலனாய்வுத் தகவலை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர், விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படும் எனக் கருதப்படும் தலைவர்களது பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், விடுதலைப் புலிகள் இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் நடவடிக்கையைக் கைவிட்டு, இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் பிரகாரம், மகிந்த ராஜபக்ஷ உட்பட, விடுதலைப் புலிகளினால் குறி வைக்கப்படலாம் என்று சந்தேகிக்கப்படும் பிரமுகர்களது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உருவான இரு இனங்களுக்குமிடையேயான முரண்பாடுகளிலும், மோதல்களிலும், அழிவுகளிலும் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வின் வகி பாகம் முக்கியமானது. தமிழ் – சிங்கள இன முரண்பாட்டினைக் கூர்மைப்படுத்தியதிலும், ஆயுத மோதல் ஒன்றிற்கான அடிப்படையை உருவாக்கியதிலும், இறுதி யுத்தத்திலும் ‘றோ’வின் பங்கு மிக முக்கியமானது. ஆனாலும், இந்த அத்தனை முயற்சிகளிலும் பெரும் அழிவுகள் ஏற்பட்டனவேயொழிய இந்தியாவுக்கு சார்பான எந்த நிகழ்வும் இலங்கைத் தீவில் நடைபெறவில்லை.

விடுதலைப் புலிகள் என்ற ஈழத் தமிழர்களது பலம் முற்றாக அழிக்கப்பட்ட இலங்கைத் தீவில் இந்தியாவின் செல்வாக்கு, தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

விடுதலைப் புலிகளது இராணுவ பலத்தை அழிக்க சிறிலங்காவுக்குப் பக்கபலமாக இருந்த இந்தியா, தற்போது தனக்கான பிராந்திய அரசியல் ஆடுகளத்தையும் இழந்தே உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலம்வரை சிங்கள தெசத்தின் பெரிய அண்ணனாக இருந்து மிரட்டல் அரசியலை நடாத்தி வந்த இந்திய அரசு, தற்போது கெஞ்சல் அரசியல் நடாத்தும் அளவிற்குத் தாழ்ந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர், விடுதலைப் பலிகளின் எதிர் அணிகளையும், அதிருப்தியாளர்களையும் ஒன்று திரட்டி சிறிலங்கா அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்ற இந்திய எதிர்பார்ப்பு, தமிழீழ மக்களது இந்தியா மீதான அதிருப்தியால் சாத்தியமாகவில்லை. இந்தியாவால் உருவாக்கி வளர்த்துவிட்ட ஆயுதக் குழுக்களில் பெரும்பாலானவை சிங்கள அரசுடன் இணைந்து ஒட்டுக் குழுக்களாகச் செயலாற்றுகின்றன. தற்போது, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். அணியும், பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ். ஆகிய இரு அணிகள் மட்டுமே தற்போதும் இந்தியாவால் போஷிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்த இரு அணிகளையும் தமிழீழ மக்கள் இந்திய ஒட்டுக் குழுக்களாகவே நம்புவதால் தமிழீழப் பிரதேசங்களில் காலூன்ற முடியாதவையாகவே உள்ளன.

இந்த நிலையில், இந்திய மக்களை உலுக்கி எடுக்கும் ‘ஸ்பெக்ரம்’ ஊழல் குற்றச்சாட்டு வெளிக்கிழம்பி மத்திய அரசையும், தமிழக அரசையும் அச்சுறுத்திக்கொண்டள்ள நிலையில். இந்த இரு எஜமானர்களையும் காப்பாற்றும் நோக்கில் இந்திய உளவு நிறுவனத்தால் ‘விடுதலைப் புலி’ பீதி கிழப்பப்பட்டது. எனினும், இதற்கு இரண்டாவதாக ஒரு காரணமும் உள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழீழ மக்கள் மீதான இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்கு பற்றி ‘விக்கி லீக்’ வெளியிட்டுவரும் தகவல்கள் இந்தியாவுக்குப் பெரும் தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்துள்ளது.

மேலும் பல தகவல்கள் விக்கிலீக்கால் வெளியிடப்படலாம் என்ற அச்சமும் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் இந்தியாவின் வகிபாகமும், தி.மு.க. அரசின் பங்களிப்பும் முற்றாக அம்பலமானால், அது தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிடும். இதுவே, இந்திய உளவுத் துறையின் ‘விடுதலைப் புலிகள்’ குறித்த எச்சரிக்கைக்கான இரண்டாவது காரணமாக உள்ளது.

தற்போது, சிறிலங்காவின் தலைவர்கள் மீதும், பொருளாதார இலக்குக்கள் மீதும் விடுதலைப் பலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற ‘றோ’ வின் எச்சரிக்கையிலும் இரண்டு இலக்குக்கள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று, சிறிலங்கா நடாத்திய தமிழினப் படு கொலையின் பங்காளியான இந்தியாவே இன்றுவரை சிறிலங்காவை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றி வருகின்றது. சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணக்கான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் போர்க் குற்றவாளிகள் நிறுத்தப்படும் நிலை உருவானால் அதில் இந்தியாவின் வகி பாகமும் கேள்விக்குள்ளாகும். காந்தி தேசம் மீதான இரத்தக் கறைகள் கேள்விகளுக்குள்ளாகாமல் நிரூபணமாகிவிடும். அதனால், ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு வரவிருக்கும் நாட்களில் விடுதலைப் புலிகள் குறித்த புரளிகளைக் கிளப்பி வடுவது, அல்லது விடுதலைப் புலிகளின் பெயரில் தமது ஒட்டுக் குழுக்கள் மூலம் தாக்குதல்களை நடாத்தி, அதனை விடுதலைப் புலிகள் செய்ததாக அறிவிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான நீதி குறித்துப் பேசும் அனைத்துலக சக்திகளை மௌனிக்க வைக்க இந்திய உளவுத்துறை முயற்சி செய்கின்றது.

இரண்டாவதாக, இந்த எச்சரிக்கை மூலம் இந்தியா சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு செய்தியையும் உணர்த்த முயல்கின்றது.

அதாவது, நாங்கள் நினைத்தால் உங்களை நிம்மதியாக வாழ விடவும் முடியும், நாங்கள் நினைத்தால் உங்கள் நித்திரையைக் கெடுக்கவும் முடியும் என்பதுதான் இந்தியா விடுக்க விரும்பும் செய்தி. தனது பிடிக்குள் அடங்க மறுத்த சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவரத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்த இந்தியா, மீண்டும் அப்படி ஒரு தருணத்தை உருவாக்க வேண்டாம் என்று சிறிலங்காவை எச்சரிக்கின்றது.

விடுதலைப் புலிகள் இல்லாவிட்டாலும், விடுதலைப் புலிகள் என்ற பெயரை வைத்தே உங்களைக் கிலி கொள்ள வைப்போம் என்ற செய்தியையும் இந்திய உளவு அமைப்பான ‘றோ’ சிங்கள தேசத்திற்கு உணர்த்த முயற்சிக்கின்றது.

- சுவிசிலிருந்து கதிரவன்

No comments:

Post a Comment