Monday, January 03, 2011

கப்பலைக் கடத்தியது புலிகளா? கனடா அதிகாரிகள்


கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடா வன்கூவரை அடைந்த அகதிகள் கப்பலான எம்..வி சன் சீ கப்பலைக் கடத்திச் சென்றது புலிகள் என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர். இக்கப்பற்பயணத்தை ஒழுங்குசெய்ய உதவிய விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்களே அக்கப்பலை ஓட்டிச்

சென்றதாகவும் கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே இந்நால்வரும் கனடாவில் தங்கியிருந்தால் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குற்றங்கூறியுள்ள கனேடிய எல்லைப் பாதுகாப்புச் சேவையினர், இவர்களை இங்கு தங்க அனுமதிப்பதா இல்லையா என்ற விசாரணையை நடத்தும்படியும் கேட்டுள்ளனராம்.

தற்போது ஃபிராசர் ரீஜனல் கரெக்ஷனல் சென்ரரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி நால்வரிடமும் கனேடியப் போலீசாரும் எல்லைச் சேவைகள் முகவர் நிலையத்தினரும் விசாரணைகளை நடத்தியுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணைகள் இம்மாதம் அல்லது பெப்ரவரி மாதமளவில் தொடங்கவுள்ளதாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் மெலிசா அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த படியால் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இவர்களை கனடாவில் தங்க அனுமதிக்க முடியாது என்றும் அண்டர்சர் தெரிவித்தார்.

மேற்படி கப்பலில் சென்ற 492 பேரில் 49 பெண்களும் 157 ஆண்களும் தடுப்பு முகாமிலிருந்து வெளியே சென்று தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வன்கூவரிலேயே தங்கவுள்ளனர். அதோடு இன்னும் சிலர் ரொரன்ரோவில் தங்குவதற்கும் அங்குள்ள தமிழர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்ற நிலையில், பலர் அங்கும் சென்றுள்ளனர்.

இதேவேளை, தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளவர்கள் வேலை செய்வதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படாததால் அவர்கள் வேலை செய்வதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment